வானத்தை நோக்கி சுட்டதை திசைதிருப்புகிறார் ஜெயக்குமார்: RS.பாரதி
திருப்போரூரில் ரவுடிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள எம்.எல்.ஏ.வின் தந்தை வானத்தை நோக்கி சுட்டதை அமைச்சர் ஜெயக்குமார் திசை திருப்புகிறார்!!
திருப்போரூரில் ரவுடிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள எம்.எல்.ஏ.வின் தந்தை வானத்தை நோக்கி சுட்டதை அமைச்சர் ஜெயக்குமார் திசை திருப்புகிறார்!!
மூன்று இளம் மாணவிகள் எரித்துக்கொலை - பெண் IAS அதிகாரி மீது ஆசிட் வீச்சு என வன்முறை வரலாறு கொண்ட அதிமுகவின் அமைச்சர் ஜெயக்குமாருக்கு - திமுகவை விமர்சிக்கும் அடிப்படைத் தகுதியே இல்லை என திமுக அமைப்புச் செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி குற்றம்சாட்டி பதிலளித்துள்ளார்..!
இது குறித்து கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி MP அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... "ஊழல், ரவுடித்தனம், கொடநாடு, பையனூர் சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்குவது, கொடநாட்டில் கொள்ளை - கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையானோர்களைக் காப்பாற்றுவது' - போன்றவற்றின் பிறப்பிடமாக இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் இடம்பெற்றுள்ள அமைச்சர் திரு. ஜெயக்குமார் தி.மு.க.,வைப் பார்த்து 'வன்முறைக் கட்சி' என்று கூறுவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர்களின் உயிர்காக்கும் வாக்கி டாக்கிகள் வாங்கியதில் ஊழல் செய்து - கொள்ளையடித்து - ஊழலில் ஊறிப் போயிருக்கும் ஜெயக்குமாருக்கு தி.மு.க.,வைப் பற்றி விமர்சிக்க அடிப்படைத் தகுதியும் இல்லை; அருகதையும் இல்லை!
திருப்போரூர் எம்.எல்.ஏ. திரு. இதயவர்மன் சம்பவம் நடந்த இடத்திற்கு, தனது நிலத்தைப் பாதுகாக்கப் போகவில்லை. அமைச்சர் பொய்ப் பிரச்சாரம் செய்வது போலவோ, அ.தி.மு.க.,வினர் அடுத்தவர் நிலங்களை, தியேட்டர்களை, பங்களாக்களை மிரட்டி எழுதியது போலவோ செய்வதற்காக அங்கு போகவில்லை. கோவில் நிலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை முன்னிட்டு அங்கு சென்றார்.
தங்கள் பகுதியில் உள்ள கோவில் நிலம் ஒரு தனியார் நிலத்திற்காகத் தாரைவார்க்கப்படுகிறது என்றால் அதைத் தட்டிக் கேட்கும் உரிமை அப்பகுதி மக்களுக்கு இருக்கிறது. அந்த மக்களின் கோரிக்கைக்கு உதவிட வேண்டிய பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு இருக்கிறது. தட்டிக் கேட்டதற்காக வீடுவரை விரட்டி வந்து தாக்கும் விதத்தில் அந்த ரவுடிகளை காவல்துறை அனுமதித்தது ஏன்?
ஆனால், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து - வன்முறையில் ஈடுபட்ட அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் பினாமி பற்றி அமைச்சர் ஜெயக்குமார் வாய் திறக்கவில்லை.
எங்கோ 'பழைய பாசம்' இன்னும் அவருக்கு உள்மனதில் ஒளிந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் ஜெயக்குமார் தன்னை சட்டம் படித்தவர் என்று சொல்லிக் கொள்வதுண்டு. ஆனால் கிரிமினல் சட்டத்தின்கீழ் முதலில் குற்றச் செயலில் ஈடுபடுபவர் யார்-அதாவது “Aggressor” என்று சொல்லப்படுபவர் யார்? அதற்கு என்ன அர்த்தம் என்பது கூட அமைச்சருக்குத் தெரியவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.
குற்றச் சம்பவத்திற்கு முதல் காரணம் யார் என்பதை விசாரித்துக் கண்டுபிடிப்பதுதான் புலனாய்வு அதிகாரியின் வேலை. அந்த வேலையை காவல்துறை அதிகாரிகள் செய்தால் அ.தி.மு.க. முக்கியப் பிரமுகர் சிக்கி விடுவார் என்பதற்காகவே, தி.மு.க. எம்.எல்.ஏ. மீது மட்டுமே பொய் வழக்குப் போட வேண்டும் என்ற ஒரே உள்நோக்கத்துடன் விசாரணை துவங்கியவுடனேயே அமைச்சர் ஜெயக்குமார் 'வழக்கின் போக்கை' திசை திருப்பும் வகையில் பேட்டி கொடுத்துள்ளார்.
50 ரவுடிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்தது அ.தி.மு.க. முக்கிய பிரமுகரின் பினாமி. ஆனால் அதை அப்படியே மறைத்து விட்டு- தி.மு.க. எம்.எல்.ஏ. மீதும், அரிவாள் வெட்டுக்கு உள்ளான அவரது தந்தை மீதும் வழக்குப் போடத் தூண்டியது யார்? அமைச்சர் ஜெயக்குமார்தானா?
போலீஸ் மாவட்டங்களை ஒவ்வொரு அமைச்சரும் தங்களுக்குள் பிரித்து எடுத்துக் கொண்டு- தி.மு.க.,வினர் மீது ஆங்காங்கே பொய் வழக்குகள் போடுவது போல் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களின் போலீஸ் துறையை அமைச்சர் ஜெயக்குமார் எடுத்துக் கொண்டு விட்டரா? என்று கேட்க விரும்புகிறேன்.
அ.தி.மு.க. முக்கியப் பிரமுகரின் உதவியுடன் குமாரும், அவரது அண்ணன் தாண்டவமூர்த்தியும் 50 ரவுடிகளைப் பயங்கர ஆயுதங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். முன்கூட்டியே புகாரளித்தும் அதைக் காவல்துறை தடுக்கத் தவறியுள்ளது. சம்பவம் நடைபெற்ற பிறகு அந்த ரவுடிகள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலில் வெட்டுக்காயம் பட்ட எம்.எல்.ஏ.,வின் தந்தை மற்றும் அந்தப் பகுதி மக்கள் அளித்த புகாரை மறைத்து விட்டு - கோவில் நிலத்திலிருந்து எம்.எல்.ஏ.,வின் வீடுவரை விரட்டி வந்த ரவுடிகளைக் காப்பாற்றும் விதத்தில் அமைச்சர் அறிக்கை விடுவது ஏன்?
READ | COVID-19க்கு சித்த மருத்துவ சிகிச்சை மட்டுமே கொடுக்கும் ஆராய்ச்சி விரைவில் தொடங்கும்
ஜெயராஜும், பென்னிக்சும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் வைத்து கொல்லப்பட்ட போது போகாத உயர் போலீஸ் அதிகாரிகள் இங்கு மட்டும் விரைந்து சென்றது ஏன்?
அந்த ரவுடிகளுக்கு இன்னும் அடைக்கலம் கொடுப்பது அமைச்சர் ஜெயக்குமாரா அல்லது அந்தப் பகுதியில் உள்ள அ.தி.மு.க. முக்கியப் பிரமுகர்களா?
அமைச்சர் ஜெயக்குமாரே “நான் துப்பாக்கி வைத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். அவர் வீடுவரை ரவுடிகள் விரட்டி வந்தால் தற்காப்பிற்கு வானத்தை நோக்கிச் சுடுவாரா? மாட்டாரா?
அப்படித்தான் அன்றைக்கு தி.மு.க. எம்.எல்.ஏ., வீட்டிலும் நடைபெற்றது. தங்கள் உயிரைப் பாதுகாக்க - தனது வீட்டிற்கே கொல்ல வந்த ரவுடிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள வானத்தை நோக்கி எம்.எல்.ஏ.,வின் தந்தை சுட்டதை திசைதிருப்பி - ஏதோ நிலத்தை அபகரிக்க நடைபெற்ற முயற்சி போல் பேசுவதும் - கோவில் நிலத்தைக் காப்பாற்ற நடைபெற்ற போராட்டத்தை ஏதோ எம்.எல்.ஏ., தனது சொந்த நலனுக்காக நடத்திய போராட்டம் போல் சித்தரிப்பதும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வேண்டாத வேலை; விபரீதமான உள்நோக்கத்தின் வெளிப்பாடு.
அதைவிட ஒரு எம்.எல்.ஏ., மீது பொய் வழக்குப் போட்டு ஒட்டு மொத்த தி.மு.க.,வை விமர்சிப்பது மிகக் கேவலமான- கேடுகெட்ட செயல் மட்டுமல்ல; உண்மையில் இதில் சம்பந்தப்பட்டுள்ள அ.தி.மு.க. முக்கிய பிரமுகரை காப்பாற்றும் அதிகார துஷ்பிரயோகம்!
தி.மு.க.,வை வன்முறைக் கட்சி என்று அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார் “நேரில் வாம்மா... பேசிக்கலாம்" என்ற 'ஆடியோப் புகழ்' அமைச்சர் திரு. ஜெயக்குமார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும்; ஒரு பெண் என்றும் பாராமல் சந்திரலேகா அவர்களின் முகத்தில் ஆசிட் வீசி- அவர் முகத்தை சீர்குலைத்த கட்சி, ரவுடிக் கட்சியான அ.தி.மு.க.
டாக்டர். சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக அசிங்கமாகப் போராட்டம் நடத்தி, உயர்நீதிமன்ற வளாகத்திலேயே செருப்பு வீசிய வன்முறைக் கட்சி, அ.தி.மு.க.
தர்மபுரியில் மூன்று இளம் மாணவிகளைக் கொடூரமாக - சக மாணவிகள் கதற, உயிரோடு எரித்துக் கொன்ற கொலைகாரக் கட்சி, அ.தி.மு.க.
கொடநாடு கொள்ளையில் ஈடுபட்டவர்களை அடையாளம் தெரிந்த ஒவ்வொருவராகக் கொல்லப்பட்டார்களே- அது எந்தக் கட்சி ஆட்சியில்? சாட்சாத் அ.தி.மு.க. ஆட்சியில்தான்!
அதுவும் இப்போது அமைச்சர் திரு. ஜெயக்குமார் அமைச்சராக இருக்கும் ஆட்சியில்தான்!
அதுமட்டுமல்ல; ஊழலில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரே கட்சி அ.தி.மு.க.,தான்!
ஊழலுக்காக முதலமைச்சர் பதவியை இழந்த ஒரே கட்சி- அதுவும் உச்சநீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்ட ஒரே கட்சி அ.தி.மு.க.,தான்.
இதையெல்லாம் மறைத்து, தற்காப்புக்காக - குறிப்பாகக் கோவில் நிலத்தைப் பாதுகாக்க - அதுவும் வானத்தை நோக்கிச் சுட்டதற்கு பொய் வழக்குப் போட்டு தி.மு.க. எம்.எல்.ஏ.,வை கைது செய்திருப்பது அ.தி.மு.க.,வின் திட்டமிட்ட சதிச் செயல்.
இதை சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நிச்சயம் சட்டத்தின்முன் நின்று சந்தித்து - நியாயத்தை நிலைநாட்டுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
ஆகவே, வன்முறைக்கும், ஊழலுக்கும், ரவுடித்தனத்திற்கும், நிலம், தியேட்டர்களை மிரட்டி அபகரிப்பதற்கும் 'புகழ்'பெற்ற அ.தி.மு.க. ஆட்சியின் அமைச்சர் திரு. ஜெயக்குமார் கொடுத்த அறிக்கை, புலனாய்வைத் திசைதிருப்பவும், அ.தி.மு.க.,வில் உள்ள உண்மை குற்றவாளிகளைத் தப்பவிடவும் எடுத்துள்ள முயற்சி. இது முறியடிக்கப்படும்!
குள்ளநரித்தனமும் - குறுக்குப் புத்தியும் கொண்ட அமைச்சர் ஜெயக்குமாரால் தி.மு.க.,வை சிறுமைப்படுத்தி விடலாம் என்று கனவில் கூட நினைக்க வேண்டாம். அவரால் மட்டுமல்ல; அவருடைய வன்முறைக் கட்சியாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று எச்சரிக்கிறேன்.