தமிழில் தீர்ப்பு: உன்னதமான திட்டத்தை உச்சநீதிமன்றம் நிறுத்தி விடக் கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; உச்சநீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடுவது  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் விவரங்களை ஆங்கிலம் தெரியாத வழக்குதாரர்களும் அறிந்து கொள்ளும் வகையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் முயற்சியால் தொடங்கப்பட்ட உன்னதமான திட்டம் தொடக்கத்திலேயே நிறுத்தப்படுவது வருத்தமளிக்கிறது.


சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும்; உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் நகல்கள் தமிழில் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்திலிருந்து நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் என்ற யோசனையை குடியரசுத் தலைவரும் தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 17-ஆம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல்கள் வெளியிடப்பட்டு வந்தன. உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை அனைத்து தரப்பினரின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.


ஆனால், தொடக்கத்தில் மட்டும் சில நாட்களுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எந்த தீர்ப்புகளும்  மொழிமாற்றம் செய்து வெளியிடப்படவில்லை. ஜூலை தொடக்கத்தில் வழங்கப்பட்ட ஒரு சில  தீர்ப்புகள் மட்டும் தான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதன்பின் கடந்த 40 நாட்களில் எந்த ஒரு தீர்ப்பும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை. ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஒரு வழக்கின் தீர்ப்பு தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு, இதுவரை வேறு எந்தத் தீர்ப்பும் எந்த மொழியிலும் மாற்றப்படவில்லை.


மாநில மொழிகளில் தீர்ப்புகள் வெளியிடப்படாதது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடமிருந்து அதிகாரப் பூர்வமாக எந்த அறிவிப்பும், விளக்கமும் வெளியிடப்படவில்லை. தமிழ்நாடு சார்ந்த முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை தமிழில் உச்சநீதிமன்றம் வெளியிடும்; அதன் மூலம் அவ்வழக்குகளின் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தமிழக மக்களும், வழக்கறிஞர்களும்  ஏமாற்றமடைந்துள்ளனர்.


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடுவதற்கு தனித்துவமான மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் ஏற்பட்ட சில நடைமுறை சிக்கல்களின் காரணமாகத் தான் மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை என்றும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மென்பொருட்கள் மூலம் மொழிபெயர்க்கப் போவதாக செய்திகள் வெளியான போதே அது சாத்தியமல்ல என்றும், அதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் என்றும்  நான் கூறியிருந்தேன். இதுதொடர்பாக கடந்த ஜூலை 3-ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மென்பொருள் மூலமான மொழிபெயர்ப்புகள் துல்லியமான இருக்காது என்பதும், பல மொழிபெயர்ப்புகள் பொருள்பிழை நிறைந்து காணப்படுவதும் கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மனிதவழி மொழிபெயர்ப்பு தான் சரியானதாக இருக்கும்’’ என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கு மாறாக,  மென்பொருட்கள் மூலம் தீர்ப்புகளை மொழிபெயர்க்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.


தீர்ப்புகளை சட்டம் தெரிந்த மொழிபெயர்ப்பு வல்லுனர்களின் மூலம் மொழிமாற்றம் செய்வது தான் மிகவும் சரியானதாக இருக்கும். இதற்காக சம்பந்தப்பட்ட மொழி பேசும் மாநிலங்களின் உதவியைக்கூட  உச்சநீதிமன்றம் கேட்டுப் பெறலாம். சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானம் கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போது, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்று அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா  கேட்டுக் கொண்டதும், அதற்கு அப்போதைய தமிழக அரசு ஒப்புக்கொண்டதும் இங்கு நினைவு கூறத்தக்கது.


எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மொழிபெயர்ப்பதற்கான வல்லுனர்களை சம்பந்தப்பட்ட மொழி பேசப்படும் மாநில அரசிடமிருந்து, அங்குள்ள உயர்நீதிமன்றம் மூலமாக உச்சநீதிமன்றம் கேட்டுப்பெற வேண்டும். அவர்களின் உதவியுடன் முக்கியத் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிட உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடும்  திட்டத்தை உச்சநீதிமன்றம் கைவிட்டு விடக்கூடாது.