ஜூன் 28 திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்: அனைவரும் பங்கேற்க உத்தரவு
வரும் 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எ.ல்ஏ-க்கள் கூட்டம்
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அன்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் சென்னையில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் துரைமுருகன், சக்கரபாணி, காங்கிரஸ் சார்பில் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், "தமிழக சட்டப்பேரவைகூட்டத் தொடர் வரும் 28 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 31 ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என அறிவிப்பு வெளியானது.
அதாவது, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மொத்தம் 23 நாட்கள் நடைபெறும். முதல் நாளில் (ஜூன் 28) மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதற்கு அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால், ஜூலை 1 ஆம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும். . ஜூலை 1 ஆம் தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வரும் 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எ.ல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் அனைத்து திமுக எம்எல்ஏக்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.