ஒற்றைத் தலைமை காலத்தின் கட்டாயம்.. EPS-க்கு எனது ஆதரவு : கடம்பூர் ராஜு
Kadambur Raju : புயலை கிளப்பிய அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரம் - எடப்பாடிக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்த கடம்பூர் ராஜூ
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் கட்சிக்குள் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. ராயப்பேட்டையில் முக்கியமான பொதுக்கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதன்முதலில் ஒற்றைத் தலைமைக் குறித்துப் பேசினார். இதையடுத்து, இந்த விவகாரம் அதிமுகவுக்குள் சூடுபிடித்தது. தொடர்ந்து அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் பலர் ஒற்றைத் தலைமைக் குறித்து தொடர்ந்து பேட்டியளித்து வந்ததை அடுத்து, இந்த விவகாரம் கட்சிக்குள் புயலைக் கிளப்பியுள்ளது.
மேலும் படிக்க | "அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம்": ஓபிஎஸ் குறித்த விளம்பரத்தால் சர்ச்சை!
இதனிடையே, ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்கும் விதமாக வரும் 23ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூடுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழுவை முன்னிட்டு எடப்பாடி ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் மோதல்போக்கை கடைபிடிக்கும் அளவுக்கு பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ளது. எடப்பாடியை தனியாக அவரது ஆதரவாளர்கள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சில முக்கியத் தலைவர்கள் ஓபிஎஸ்க்கும், இபிஎஸ்க்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் செய்தி துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ எவ்வித கருத்தும் தெரிவிக்கமால் இருந்தார். இந்நிலையில் தற்போது கட்சி நிர்வாகிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திடீரென அவர் ஆலோசனை நடத்தினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் 29 பேர் மற்றும் சிறப்பு அழைப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன் உட்பட 30 பேர் கலந்து கொண்டனர். பொதுக்குழு மற்றும் தீர்மானங்கள் குறித்தும், கட்சியின் இன்றைய நிலை குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், ‘அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடைபெற்று, அதற்கு ஒப்புதல் பெற பொதுக்குழு கூட்டம் நடத்தவது வழக்கமான ஒன்றுதான் என்றார். இது தொடர்பாக தலைமைக் கழகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது, பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறியதாக தெரிவித்தார். எனவே இது காலத்தின் கட்டாயம் என்றும், சிறிய கட்சிகள் கூட ஒற்றை தலைமையின் கீழ் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
இதுதொடர்பாக இன்று ஆலோசனை நடத்தியதில் அனைத்து உறுப்பினர்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கடம்பூர் ராஜூ வெளிப்படையாக அறிவித்தார்.
எனவே, அவர்களின் முடிவு தான், தன்னுடைய முடிவு என்றும், ஓ.பி.எஸ் யார் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் கூறினார். உள்ளாட்சி தேர்தல் ஏன் நடத்தாமல் இருந்தது என்பது ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரியும் என்று கூறிய கடம்பூர் ராஜூ, அதிமுகவில் பிளவு என்பது கிடையாது என்றார். அதிமுகவில் பிரிவு இல்லாமல் ஒற்றுமையாக நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR