கமல்ஹாசன் இன்றும், நாளையும் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி மதுரையில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியினை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். 


திருச்சியில் ஏப்ரல் 4-ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து, மகளிர் தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னையில் கமல் விழா நடத்தினார். 


இந்த நிலையில், கமல்ஹாசன் இன்றும், நாளையும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்கிறார். இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார்.


கோவை விமான நிலையத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து, காரில், தொண்டர்கள் புடை சூழ, அவிநாசி புறப்பட்டார். பிற்பகல் அவினாசி சென்ற கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார்.


பின்னர் இன்று, விவசாயிகளை சந்தித்தார். அப்போது அத்திக்கடவு-அவினாசி நீர்பாசன திட்டம் குறித்து அவர்களிடம் கலந்துரையாடினார். விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிகிறார்.


அங்கிருந்து புறப்படும் அவர் வழி நெடுக மக்களை சந்திக்கிறார். பிற்பகலில் மாமரத்துப்பாளையம் செல்லும் கமல்ஹாசன், அங்கு மாற்று திறனாளிகளுக்கான பள்ளியை திறந்து வைக்கிறார். மாலை 6 மணிக்கு ஈரோடு செல்லும் அவருக்கு கட்சி தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்குள்ள ஹோட்டலில் கட்சி நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் சந்தித்து பேசுகிறார்.


நாளை காலை 8.30 மணிக்கு மொடக்குறிச்சியில் இருந்து கமல்ஹாசன் சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். 9.30 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது 18 இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியை கமல்ஹாசன் ஏற்றுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.