தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் விளவங்கோடு எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் இப்போது பாஜகவில் ஐக்கியமாகியிருக்கிறார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் டெல்லியில் முகாமிட்டிருந்த அவர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தன்னை பாரதிய ஜனதாவில் இணைத்துக் கொண்டார். விஜயதரணி சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்காதபோதே அவர் பாஜகவில் இணையப்போகிறார் என்ற செய்திகள் எல்லாம் பரவத் தொடங்கிவிட்டது. இருப்பினும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, கட்சி எம்எல்ஏவை விட்டுக் கொடுக்காமல் பேச வேண்டும் என்பதற்காக ஒப்புக்கு சப்பு காரணங்களை கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, விஜயதரணி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றிக்காக டெல்லியில் இருப்பதாகவும், பாஜகவில் இணைய வாய்ப்பில்லை என்றும் விளக்கம் அளித்து வந்தார். இருப்பினும், அவர் பாஜகவில் இணைந்துவிட்டதை அறிந்தவுடன், மக்கள் பணியே செய்யாமல் இருந்தபோதும் கூட காங்கிரஸ் கட்சி அவருக்கு உரிய மரியாதை மற்றும் பல்வேறு பொறுப்புகளை கொடுத்து மரியாதையுடன் நடத்தியதாக விஜயரணியை விமர்ச்சித்தார். இதற்கு இதுவரை பதில் ஏதும் அளிக்காத விஜயதரணி, தான் பாஜகவில் ஏன் சேர்ந்தேன் என்பதற்கு செய்தியாளர்களிடம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், காங்கிரஸில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை, பொறுப்புகளை கொடுப்பதில்லை என குற்றச்சாட்டினார்.


மேலும் படிக்க | விஜயதரணி விலகல்: காங்கிரஸ் ரியாக்ஷன் - பறிபோகும் எம்எல்ஏ பதவி..!


அதனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையை ஏற்று பாஜகவுக்கு வந்திருப்பதாக கூறிவிட்டார். ஆனால், விஜயதரணி பாஜகவில் இணைந்ததற்கான இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன. அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை எதிர்பார்த்தார். அது கிடைக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்பினார். ஒவ்வொரு முறையும் சீட் மறுக்கப்பட்டபோதும், விளவங்கோடு எம்எல்ஏ சீட் மட்டும் கிடைத்தது. அதுவும் கடந்த முறை பல்வேறு போராட்டத்துக்குப் பிறகே அந்த சீட்டும் கொடுக்கப்பட்டது. இம்முறையும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என விஜயதரணி தெரிந்து கொண்டார். 1999 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின்போதும் சீட் கேட்டு வந்ததாக டெல்லியில் பாஜகவில் இணைந்த பிறகு அளித்த பேட்டியிலேயே கூட அவர் கூறியிருந்தார்.


இந்த அதிருப்திகளுடன் விஜயதரணி இருந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வ பெருந்தகை நியமிக்கப்பட்டதும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பாவது கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அதனையும் கொடுக்காமல் விஜயதரணியை விட ஜூனியரான ராஜேஷ்குமார் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்புக்குப் பிறகு தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து முழுமையாக விலகுவது என்ற முடிவுக்கே வந்துவிட்டார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சீட் கொடுக்காது என்பதால் தொலைநோக்கு பார்வையுடன் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார்.


அதாவது, நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் தான் அவர் பாஜகவில் சேர்ந்திருக்கிறார். அதற்கு டெல்லி பாஜக மேலிடம் எந்த கிரீன் சிக்னலும் கொடுக்கவில்லையாம். இருப்பினும் கன்னியாகுமரி பாஜகவில் இது தொடர்பான சலசலப்பு உருவாகியுள்ளது. ஏனென்றால், கன்னியாகுமரியில் அக்கட்சியின் மூத்த தலைவரான பொன் ராதாகிருஷ்ணன் தேர்தல் பணிமனைகளை திறந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளையே தொடங்கிவிட்டார். இப்படியிருக்க, புதிதாக கட்சியில் இணைந்த விஜயதரணிக்கு எப்படி சீட் கொடுப்பார்கள்? என்ற முனுமுனுப்பு பாஜகவினரிடையே எழுந்திருக்கிறது. 


பொன்.ராதாகிருஷ்ணனை ஓரங்கட்ட விஜயதரணியை தமிழ்நாடு பாஜக முன்னிறுத்தப்போகிறதோ என்ற கலக்கமும் குமரி பாஜகவினரிடம் எழுந்துள்ளது. ஆனால் விஜயதரணியோ தனக்கு குமரியில் சீட் கொடுத்தால் கட்டாயம் வென்று காட்டுவேன் என ஆணித்தரமாக தெரிவித்திருக்கிறாராம். இருப்பினும் பாஜக கட்சி தலைமை கடைசி நேரத்தில் என்ன முடிவெடுக்கப்போகிறதோ என்ற கலக்கம் பாஜகவினரிடம் ஏற்படாமல் இல்லை. பாஜகவில் விஜயதரணி என்ட்ரியே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் அவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.  


மேலும் படிக்க | மோடியை எதிர்க்கும் துணிவு யாருக்கும் இல்லை - அண்ணாமலை பேச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ