காவிரி தீர்ப்பாய உத்தரவை கர்நாடகா மதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்
காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இல்லாத சூழல் உருவாகி உள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்திற்கு நிலுவை வைத்துள்ள, 62 டி.எம்.சி., நீரை, உடனடியாக திறக்க வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட் விசாரித்தது.
அப்போது பேசிய நீதிபதிகள்:- காவிரி தீர்ப்பாய உத்தரவை கர்நாடகா மதிக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் திறக்க முடியும் என்பதை கர்நாடகா தெரிவிக்க வேண்டும். காவிரி நீர் விவகாரத்தில் இரு மாநிலங்களும் அமைதியை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் தரலாம். தமிழகத்தில் 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலத்திற்கு தண்ணீர் தண்ணீர் திறந்து விடலாம் எனவும், ஆகஸ்ட் மாதத்திற்கான தண்ணீரை ஏன் இன்னும் திறக்கவில்லை என் கேள்வியும் எழுப்பினர்.
அப்போது கர்நாடகா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநிலத்தில் இன்னும் பருவமழை துவங்காததால், தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது எனக்கூறினார். பின்னர் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து இந்த வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், கர்நாடக அரசின் மனு குறிதது தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.