திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து இன்று மாலை 6 மணிக்குள் காவேரி மருத்துவமனை புதிய அறிக்கையை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை முக ஸ்டாலின் அவர்கள் சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், ஆ ராசா, முரசொலி செல்வம், ஐ பெரியசாமி ஆகியோ சந்திப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 1200 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயுதப்படை காவலர்கள் 500 பேரும், தமிழக சிறப்பு காவல்படை வீரர்கள் 700 பேரும்  உள்ளனர். சென்னையில் உள்ள 135 காவல் நிலையங்களில் இருந்து தலா 5 காவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த பத்து நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.  


நேற்று காவேரி மருத்துவமனை திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், கருணாநிதியின் உடல் உறுப்புகளில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பின்பு தான் எந்த முடிவையும் சொல்ல முடியும். தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதனால் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும்  எழுந்து வா தலைவா.... மீண்டு வா தலைவா.... என்ற கோசத்துடன் திமுக தலைவர் கருணாநிதிக்காக கண்ணீர் மல்க நிற்கின்றனர்.


இந்நிலையில் தற்போது நேற்று மதியம் முதல் இன்று மதியம் வரை கருணாநிதிக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், அவற்றினை அவரது உடல் உறுப்புகள் ஏற்றுக் கொள்ளும் தன்மை ஆகியவற்றை பொறுத்துதான் மற்றொரு அறிக்கை மருத்துவமனை தரப்பில் வெளியாகும் என தெரிகிறது. இன்று மாலை 6 மணியளவில் புதிய அறிக்கை வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.