கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம்; ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவுதினத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாலாஜா சாலையில் இருந்து அமைதிப்பேரணி தொடங்கியது!!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவுதினத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாலாஜா சாலையில் இருந்து அமைதிப்பேரணி தொடங்கியது!!
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதலாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, காலை 8 மணிக்கு அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து திமுகவினர் அமைதி ஊர்வலமாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர்.
முதலாம் நினைவு தினத்தை ஒட்டி, கோடம்பாக்கத்தில் உள்ள திமுக அதிகாரப்பூர்வ இதழான முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிலையை திறந்து வைக்கிறார். இதில், பங்கேற்க சென்னை வந்த மம்தா, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கருணாநிதி சிலை திறப்புக்காக தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
மேலும், மாலை 5.30 மணியளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கும் தலைவர்கள் அனைவரும் கருணாநிதியின் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், தி.மு.க. சார்பில் சென்னை வாலாஜா சாலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி இன்று காலை தொடங்கியது. இந்த பேரணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் துரைமுருகன், கனிமொழி எம்.பி, ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.