கோவில்பட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை - பழிக்குப் பழியா ?
![கோவில்பட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை - பழிக்குப் பழியா ? கோவில்பட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை - பழிக்குப் பழியா ?](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2022/08/23/244030-a-10.jpg?itok=9SyiFiPI)
CRIME : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பியவர்கள் மிரட்டியதால் அரங்கேறியதா இந்த படுபயங்கரம் ?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் கடந்த 15 வருடங்களாக ஊராட்சி மன்ற தலைவராக தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்தவர். தற்போது இவரது மனைவி திட்டங்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மாட்டுத்தொழுவத்தில் அமர்ந்து இருந்த பொன்ராஜ்ஜை மர்ம நபர்கள் சிலர் சுற்றி வளைத்துள்ளனர். ஏதோ அசம்பாவிதம் அரங்கேறப் போகிறது என்பதை சுதாரிப்பதற்குள் அவர்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த பொன்ராஜ் அங்கேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் மிரண்டு போனார்கள். உடனே இது குறித்து தகவல் கிடைத்தும் கோவில்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கொலை நடந்த இடத்தை பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டுவந்த அதிகாரிகள் கிடைத்த தடயங்களை சேகரித்துக் கொண்டனர். பின்னர் சோதனைக்கு பின், கொலை செய்யப்பட்டுக் கிடந்த பொன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் சில சந்தேக பார்வைகள் போலீசாரின் பிடியில் சிக்கியது.
ஊரில் நிறைவேற்றச் சொன்ன தீர்மானத்தினை தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவரான பொன்ராஜின் மனைவி நிறைவேற்றவில்லை என்றும், அதுதொடர்பாக கிராம சபை கூட்டத்தில் வைத்து கேள்வி கேட்ட அதே ஊரைச் சேர்ந்த பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திக் மற்றும் வசந்த் ஆகிய இருவரையும், பொன்ராஜ் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் பொன்ராஜை திட்டமிட்டு அவர்கள் இருவரும் கொன்றிருப்பார்களா ? என்ற சந்தேக கோணத்தில் கார்த்திக் மற்றும் வசந்த் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உறுதிப்படுத்த அவரது உறவினர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | ஒரே சேலையில் வாழ்க்கையை முடித்து கொண்ட காதல்ஜோடி!!
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். ஆயினும் தெற்கு திட்டங்குளத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் பெரும் போலீஸ் படையே அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, விசாரணையின் முடிவில்தான் பொன்ராஜின் கொலைக்கான காரணங்கள் குறித்து வெளிவரும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | கிருஷ்ண ஜெயந்தி விழாவில் அரைகுறை ஆடையுடன் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ