செப்டம்பர் 28 முதல் கட்டம் கட்டமாக கோயம்பேடு சந்தை திறக்கப்படும்: OPS
செப்டம்பர் 28 முதல் கோயம்பேட்டில் மொத்த காய்கறி சந்தை கட்டம் கட்டமாக செயல்படத் தொடங்கும் என்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னை: செப்டம்பர் 28 முதல் கோயம்பேட்டில் மொத்த காய்கறி சந்தை (Koyambedu Market) கட்டம் கட்டமாக செயல்படத் தொடங்கும் என்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் (O Paneerselvam) அறிவித்துள்ளார். அதே நேரத்தில் மொத்த பழங்கள் மற்றும் மலர் சந்தை இன்னும் சில நாட்களுக்குப் பிறகு திறக்கப்படும்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய கோயம்பேடு மொத்த சந்தை வளாகம், தமிழகம், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மற்றும் தொலைதூர மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்தும் பல வித பொருட்களைப் பெறுகிறது. மே மாதத்தில், இந்த சந்தை ஒரு பெரிய COVID -19 கிளஸ்டராக அறிவிக்கப்பட்ட பின்னர் மூடப்பட்டது. தற்போது தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு மீண்டும் இந்த சந்தை திறக்கப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தை மூடப்படும். நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் தலைவரான துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், கோயம்பேடு சந்தையில் ஆய்வு நடத்திய சில மணி நேரங்கள் கழித்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சந்தையின் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி அவர் ஆய்வு செய்தார்.
மொத்த தானிய சந்தை செப்டம்பர் 18 ஆம் தேதி கோயம்பேட்டில் மீண்டும் திறக்கப்படும் என்றும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 28 ஆம் தேதி மொத்த காய்கறி கடைகள் திறக்கும் என்றும் ஓபிஎஸ் அறிவித்ததார். பழங்கள் மற்றும் பூக்கள் சந்தை கடைசி கட்டத்தில் திறக்கப்படும்.
சந்தைக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் கேட் ஏ அருகே ஒதுக்கப்பட்ட தற்காலிக வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த அனுமதிக்கப்படும் என்றும் கடைக்கு ஒரு வாகனம் மட்டுமே சந்தையில் நுழைய அனுமதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு லாரிகள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும், மேலும் சரக்கை இறக்கிய பின் 12 மணிக்கு முன் இவை வளாகத்திலிருந்து வெளியேற வேண்டும்.
ALSO READ: கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகளில் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு
இருப்பினும், எந்தவொரு தனியார் நபர்களும், ஆட்டோரிக்ஷாக்களும், இரு சக்கர வாகனங்களும் சந்தைக்குள் அனுமதிக்கப்படாது என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
சந்தையில் மீண்டும் வணிகத்தைத் திறக்க அனுமதிக்கப்பட்ட அனைத்து வர்த்தகர்களுக்கும் அடையாள அட்டைகள் (Identity Cards) வழங்கப்படும் என்றும் சரியான சுத்திகரிப்புக்குப் பிறகுதான் சந்தையில் நுழைய அனுமதிக்கப்படும் என்றும் ஓ.பி.எஸ். மேலும் தெரிவித்தார். அனைத்து வர்த்தகர்களும் தங்கள் வணிக நேரங்களிலெல்லாம் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என்றும், ஒவ்வொரு கடையிலும் சானிடைசர்களும் சுத்திகரிப்பு வசதிகளும் இருக்க வேண்டியது கட்டாயமாகும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடையில் பணிபுரியும் அனைவரும் முகக்கவசம் அணிந்து, அடையாள அட்டைகளை அணிந்திருக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் கூறினார்.
வாரத்தில் ஒரு நாள் சுத்திகரிப்புக்காக கடைகள் மூடப்படும் என்றும் அறிக்கையில் துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
ALSO READ: COVID மீட்பு விகிதத்தில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம்: மத்திய சுகாதார அமைச்சகம்!!