குரங்கணி சம்பவம் இயற்கையானதா? செயற்கையானதா? ஆராய வேண்டும்: சத்யராஜ்
குரங்கணி காட்டுத் தீ சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுக்குறித்து சரியான விசாரணை தேவை என வலியுறுத்தி நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் கடந்த 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தால், அங்கு இருந்த 39 பேர் படுகாயமடைந்தனர். அதில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேற்று தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு சென்றி நேரில் ஆய்வு செய்தனர். மேலும் தமிழக முதல்வர் நிவாரண நிதியும் அறிவித்துள்ளார்.
தற்போது தமிழக அரசியலில் களம்கண்டுள்ள கமல்ஹாசன், இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை போனில்அழைத்து பேசினார் வருகின்றனர். ஆனால் இமயமலை சென்றிருக்கும் ரஜினிகாந்த், இச்சம்பவம் குறித்து எந்த ஒரு கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் சத்யராஜ் குரங்கணி காட்டுத் தீ தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
"குரங்கணி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து மனதிற்கு மிகவும் வேதனையை உண்டாக்கியது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும் இதுபோன்ற விஷயங்களில் இனிமேல் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற விபத்துகள் தடுக்கப்பட வேண்டும். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கைகை மேற்கொள்ளும் என நம்புகிறேன். குரங்கணி காட்டுத் தீ சம்பவம் இயற்கையாக ஏற்பட்டதா? அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா? என ஆராய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு அவர் வீடியோவில் கூறியுள்ளார்.