Actor TVK Leader Met Army Officers : தளபதி 69 படத்தில் தற்போது பிசியாக நடித்து வரும் நடிகர் விஜய், நேற்று திடீரென ராணுவத்தினரை சந்தித்தார். இந்த சந்திப்பு ஏன்? என்பது குறித்த கேள்விகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
விஜயின் அரசியல் வியூகம்:
தமிழ் திரையுலகின் டாப் நடிகர்கள் ஒருவராக வளம் வரும் விஜய், தற்போது தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் போதே, தற்போது கமிட்டாகி இருக்கும் படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேரமாக அரசியலில் ஈடுபட இருப்பதாக அறிவித்த அவர், அதற்கான முன்னெடுப்புகளையும் ஆரம்பித்துவிட்டார்.
இது யானைகளுக்கு நடுவே வாகை மலர் வைத்த கட்சிக்கொடி, துல்லியமாக தயாரிக்கப்பட்ட கட்சி கொள்கைகள் என தனக்கென தனி பாணியில் அரசியல் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறார் விஜய். தளபதி 69 படத்தில் நடித்து முடித்த பின், தமிழகம் முழுவதும் அரசியல் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரது முதல் மாநாட்டு பேச்சு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரை அதிரவைக்கும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது அவர் ராணுவ வீரர்களை சந்தித்திருப்பதும் மக்களின் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.
ராணுவ வீரர்களுடன் திடீர் சந்திப்பு:
நடிகர் விஜய் நேற்று சென்னையில் உள்ள பரங்கிமலை ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி பள்ளிக்கு வந்தார். இங்கு நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர், ராணுவ வீரர்களுடன் பேசி அவர்களின் அனுபவங்களையும் கேட்டறிந்தார். ராணுவ வீரர்களுக்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
விஜய் எங்கு செல்கிறார், எப்போது செல்கிறார், என்பது குறித்து விவரங்கள் தமிழக வெற்றிக்கழக செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எப்போதும் தெரிந்த வண்ணம் இருக்கும். ஆனால், விஜய் ராணுவ வீரர்களை சந்தித்த இந்த நிகழ்வு குறித்து யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. கடைசி நிமிடத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய் ஓகே சொன்னதால் இது பிறருக்கு தெரியாமல் போய் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் விஜய் உடன் சேர்ந்து தளபதி 69 பட இயக்குனர் எச்.வினோத்தும் கலந்து கொண்டார்.
முதல் மாநாடு ஏற்படுத்திய தாக்கம்:
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கரவாண்டியில் நடைப்பெற்றது. இந்த மாநாட்டில் நடைபெற இருக்கும் விஷயம் என்ன, இதில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பது குறித்த பல்வேறு கேள்விகள் மாநாட்டிற்கு முன்பு இருந்தது. இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் இருந்தது, விஜய்யின் 45 நிமிட உரை. கூற வந்ததை, சினிமா பாணியில் தெள்ளத்தெளிவாக பேசினார். அரசியல் வழிக்காட்டிகளை தன் உரையில் அறிமுகப்படுத்திய அவர், நீட் தேர்வுக்கு எதிராக பேசியது, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் சம உரிமை, சமத்துவ கொள்கை என அனைத்தையும் தெளிவுர பேசி மக்கள் மற்றும் சில அரசியல் கட்சிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். இது, 2026ஆம் ஆண்டு தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.