Ennore Gas Leak: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு... மாசு கட்டுப்பாட்டு வாரியம் அப்டேட்!
Ennore Ammonia Gas Leak In Chennai: சென்னை, எண்ணூர் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டதாகவும், பொது மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
Ennore Ammonia Gas Leak Latest Update News in Tamil: சென்னை எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக 40க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு வாயு கசிந்த நிலையில், இன்று அந்த தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசும் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருவதாகவும் பெரிய அளிவில் உடல்நல பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் விளக்கம் அளித்திருந்தார்.
நடந்தது என்ன?
அந்த வகையில், தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த அமோனியா வாயு கசிவு குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,"சென்னை, எண்ணூர் பகுதியில், நேற்று (டிச. 26) நள்ளிரவு 11.45 மணியளவில், கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் என்னும் நிறுவனத்தின்
அம்மோனியா குழாய்களில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் அருகில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.
சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அம்மோனியா திரவம் மூலப்பொருளாகத் தொழிற்சாலையின் வளாகத்தில் சேமிப்புத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் அம்மோனியா திரவம் அவ்வப்போது வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, எண்ணூரில் அமைந்துள்ள சிறுதுறைமுகத்தில் இருந்து உரிய குழாய்கள் மூலமாக இந்தத் தொழிற்சாலையில் உள்ள சேமிப்புத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாயுக் கசிவு முற்றிலும் நிறுத்தம்
இந்த நிலையில், நேற்று (டிச. 26) நள்ளிரவு 11.45 மணியளவில் இந்த தொழிற்சாலையில் உள்ள குழாய்களில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவினால், தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்துவந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. வாயுக் கசிவினைக் கண்டறிந்தவுடன், தகுந்த நிபுணர்கள் உடனே வரவழைக்கப்பட்டு, 20 நிமிடங்களில் அந்தத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
மேலும், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து போதுமான ஆம்புலன்ஸ்களை உடனடியாக ஏற்பாடு செய்து, நிலைமை சரிசெய்யப்பட்டது. இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில்
சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது 52 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்காக இரண்டு நுரையீரல் நிபுணர்களைக் கொண்டு 5 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, அவர்களது உடல்நலன் குறித்து விசாரித்து, உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்கிட உத்தரவிட்டார்.
மூன்று நாள்களில் விரிவான அறிக்கை
தற்போது குழாயில் அம்மோனியா கசிவு இல்லை என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தை (Chennai IIT) சேர்ந்த நிபுணர்கள், ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்பக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது உடனடி மதிப்பீட்டு அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்குமாறும், தனது விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அச்சப்பட தேவையில்லை
மேலும், கப்பலில் இருந்து கொண்டு வரப்படும் அம்மோனியாவை வெளியே எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் குழாய்களை முற்றிலுமாக சரிசெய்து, உரிய பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகே, அம்மோனியா கப்பலில் இருந்து இறக்கப்பட வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகத்திற்கு தமிழ்நாடு அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது, CPCL நிறுவனம் அதன் எண்ணெய் கழிவுகளை வெள்ள நீரில் கலந்துவிட்டதை அடுத்து, எண்ணூர் முதல் சுற்றுவட்டார கடல்பகுதிகள் எண்ணெய் படலத்துடன் காட்சியளித்தது. இதனால், மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பலத்த பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில், இந்த வாயு கசிவு பிரச்னையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கி உள்ளது. தண்டார்பேட்டையில் உள்ள IOC தொழிற்சாலையில் பாயிலர் வெடித்த விபத்தில் ஒரு ஒப்பந்த பணியாளர் பெருமாள் உயிரிழந்தார். காயமடைந்த மற்றொரு பணியாளர் சரவணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க | வாயுக் கசிவால் செத்து மிதக்கும் மீன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ