எதிர்க்கட்சிகளின் கையில் நாட்டை கொடுத்தால் நாடு தாங்குமா: EPS
பிரதமரைப் பற்றி பேசும் அளவுக்கு பெரிய ஆள் ஆகிவிட்டார் ஸ்டாலின் என எடப்பாடி விமர்சனம்!!
பிரதமரைப் பற்றி பேசும் அளவுக்கு பெரிய ஆள் ஆகிவிட்டார் ஸ்டாலின் என எடப்பாடி விமர்சனம்!!
நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். தோவாளை பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ``மத்தியில் நிலையான ஆட்சி வழங்க பிரதமராக மோடி வரவேண்டும். பிரதமர் மோடியால் நாடு செழிக்கும், மக்கள் நன்றாக வாழ்வார்கள். குமரி மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டம். எனவே, யார் வந்தால் சிறந்த ஆட்சி நடக்கும், யார் திறமையான பிரதமர் என சிந்தித்து வாக்களியுங்கள். நம்மை பாதுகாக்கும் பிரதமர் மோடி ஆட்சிக்குவர தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
பொன்.ராதாகிருஷ்ணன் எப்போதும் என்னை சந்தித்தாலும் கன்னியாகுமரி மக்களுக்கான பல்வேறு திட்டங்களைக் கேட்டு பெறுபவர். அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் வேறு மாவட்டத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர். ஏற்கெனவே எம்.எல்.ஏ.வாக இருப்பருக்கு எம்.பி.பதவி எதற்கு. மாவட்ட மக்களைப் பற்றி தெரியாதவர், எந்த ஊரில் என்ன பிரச்னை என தெரியாதவர் எப்படி மக்கள் பணி செய்ய முடியும். மத்தியில் செல்வாக்கு உள்ள பொன்.ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தால் நல்ல பணிகளைச் செய்வார்.
ஸ்டாலின் ஏதோதோ பேசுகிறார். பிரதமரைப் பற்றியும் பேசுகிறார். பிரதமரைப் பற்றி பேசும் அளவுக்கு பெரிய ஆள் ஆகிவிட்டார்.பிற நாட்டுத் தலைவர்களின் அன்பைப் பெற்று இந்தியாவை திரும்பிப்பார்க்க வைத்தவர் பிரதமர் மோடி. அண்டை நாட்டு தீய சக்திகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும்.
BJP கூட்டணி வைத்திருக்கும் இடங்களில் எல்லாம் எங்காவது எதிர்ப்பு இருக்கிறதா. ஒரே ஒரு ராசியான ஆளான ஸ்டாலின் மட்டும் ராகுல் பிரதமர் ஆவார் என்கிறார். மேற்குவங்கத்துக்குச் சென்ற ஸ்டாலின் தேர்தலுக்குப் பிறகு பிரதமரை முடிவு செய்யலாம் என்றார். இப்போது பிரதமர் யார் எனச் சொல்லமுடியாது என்றால் நிலையான ஆட்சியை எப்படி தரமுடியும். சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, அகிலேஷ் என ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒருவருக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவர்களிடம் நாட்டைக் கொடுத்தால் நாடு தாங்குமா. குரங்கின் கையில் பூமாலை கொடுத்ததுபோல் ஆகும். நம் பாதுகாப்பு முக்கியம், அப்போதுதான் குமரியில், தோவாளையில் வாழ முடியும். விஞ்ஞான உலகில் விஞ்ஞான முறையில் எதிர்க்கக்கூடியவர் பிரதமர் மோடி" என அவர் பிரட்சாரத்தில் பேசினார்.