Tamil Nadu Lok Sabha Elections Result: இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்கும் லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள் நாளை காலை 8 மணி முதல் வெளியாக இருக்கிறது. 543 தொகுதிகளின் முடிவுகளும் வெளியாக உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளின் முடிவுகள் இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கும். முதலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கையும், அடுத்ததாக வாக்குப்பெட்டியில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட இருக்கின்றன. காலை 11 மணிக்கு எல்லாம் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற நிலவரம் ஏறத்தாழ தெரிந்துவிடும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 39 தொகுதிகளில் திமுக  - காங்கிரஸ் கூட்டணி ஒரு அணியாகவும், பாஜக மற்றும் அதிமுக ஆகியவை தனி அணியாகவும் போட்டியிட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜக தமிழ்நாட்டில் புதிய கணக்கை தொடங்கும் முனைப்பில் இருக்கும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திமுக - காங்கிரஸ் கூட்டணியே பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன. இருப்பினும் இதில் 5 தொகுதிகளின் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவை எந்த தொகுதிகள்?, வேட்பாளர்கள் யார்? என்ற விவரத்தை தெரிந்து கொள்வோம்.  


1. தமிழிசை சௌந்தரராஜன் (தென் சென்னை)


தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னைக்கான பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவர் தற்போதைய எம்.பி. மற்றும் முன்னாள் எம்.பி.க்கு எதிராக கடும் போட்டியை எதிர்கொள்கிறார். அவருக்கு எதிராக திமுகவின் தற்போதைய எம்பி தமிழச்சி தங்கபாண்டியனும், அதிமுகவின் முன்னாள் எம்பி ஜெயவர்தனும் போட்டியிடுகின்றனர். முன்னதாக தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்த தமிழிசை, தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்தப் பதவிகளை ராஜினாமா செய்தார். தமிழக பாஜக முன்னாள் தலைவரான இவர் தென் சென்னையில் பிரபலமானவர். இருப்பினும் இவருக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்றாலும், எவ்வளவு வாக்குகளை பெறப்போகிறார்? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.


மேலும் படிக்க | Exit Poll: மேற்கு வங்கத்தில் யாருக்கு அதிக இடம் கிடைக்கும்... ரவீந்திரன் துரைசாமி கணிப்பு!


2.  ஆ. ராசா (நீலகிரி)


திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா நான்காவது முறையாக நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். தனி தொகுதியான நீலகிரி தொகுதியில், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் உட்பட பலதரப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவருக்கு எதிராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் மாநில அமைச்சரும், சட்டமன்ற சபாநாயகர் பதவியில் இருந்த பி.தனபாலின் மகன் டி.லோகேஷ் போட்டியிடுகிறார். ஆ. ராசாவுக்கு வாய்ப்பு அதிகம் என்றாலும், கடும் போட்டி இருக்கும் தொகுதியாக பார்க்கப்படுகிறது. 


3. கே அண்ணாமலை (கோவை)


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரடியாக களம் கண்டிருக்கக்கூடிய தொகுதி. பாஜகவின் செல்வாக்கு இருக்கும் தொகுதியாகவும் இது என்பதால், அண்ணாமலை வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் தேசிய தலைமை இருக்கிறது. அதற்காக ஆர்எஸ்எஸ் முதல் பாஜக தொண்டர்கள் வரை இந்த தொகுதியில் கடும் உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். அண்ணாமலைக்கு பிரத்யேகமாக தனி நரேடிவ் செட் செய்திருந்தார்கள். அவருக்கு எதிராக திமுகவின் முன்னாள் நகர மேயர் பி கணபதி ராஜ்குமார் மற்றும் அதிமுகவின் சிங்கை ஜி ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். ஆனால் அண்ணாமலை மூன்றாம் இடமே பிடிப்பார் என்கிறது கள நிலவரம். 


4. தொல் திருமாவளவன் (சிதம்பரம்)


விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிகே) தலைவர் தொல் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். திருமாவளவன் 2019 தேர்தலில் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை அதிமுகவின் எம்.சந்திரஹாசனையும், பாஜகவின் பி.கார்த்தியாயினியையும் எதிர்த்து போட்டியிடுகிறார். சிதம்பரம் தொகுதியில் கணிசமான தலித் மக்கள் தொகை உள்ளது. இருப்பினும், சாதிய தலைவராக இல்லாமல் ஒரு பொதுத்தலைவர் என்ற பிம்பத்துக்கு திருமாவளவன் உயர்ந்துவிட்டதால், இம்முறை கடந்த முறை போல் அல்லாமல் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது. பாஜகவில் தடா ராஜேந்திரன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு அங்கு பாஜக வாய்ப்பு கொடுக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் அண்ணாமலை மீது சொந்தக்கட்சிக்காரர்களே விமர்சனங்கள் வைத்தது தேர்தலின்போது சலசலப்பாக இருந்தது. 


5. ஓ பன்னீர்செல்வம் (ராமநாதபுரம்)


தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து ஓபிஎஸ் தனது அரசியல் பலத்தை வெளிப்படுத்த பகீரத முயற்சியில் இறங்கியிருக்கிறார். திமுக கூட்டணியில் தமுமுக வேட்பாளர் கே.நவாஸ் கனியையும், அதிமுக வேட்பாளர் பி.ஜெயபெருமாளையும் எதிர்கொள்கிறார். போட்டி கடுமையாக இருந்தாலும், ஓ பன்னீர்செல்வம் இந்த தொகுதியில் வெற்றி பெறுவது கொஞ்சம் கடினம் என்கிறது கருத்து கணிப்புகள். இருப்பினும், கருத்து கணிப்புகள் என்பது மாயை என்பதால், இந்த தொகுதிகளின் அதிகாரப்பூர்வ முடிவுகளை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.  


மேலும் படிக்க | அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ