500 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர்... நாடு முழுவதும் உரிமைத்தொகை - திமுக தேர்தல் அறிக்கை
DMK Election Manifesto Highlights 2024: மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக தரப்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் எல்பிஜி, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
DMK Election Manifesto 2024: மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவின் போதே தமிழநாட்டிலும் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது. அதிமுக அதன் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டு கூட்டணி பங்கீடையும் இறுதி செய்த நிலையில், திமுக அதன் மொத்த 21 வேட்பாளர்களையும், தேர்தல் அறிக்கையையும் இன்று வெளியிட்டது. திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களையும், வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தார்.
மேலும் படிக்க | திமுகவில் 50 சதவீதம் புதுமுக வேட்பாளர்கள்! யார் எந்த தொகுதியில் போட்டி?
திமுக சார்பில் 64 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட நிலையில், அந்த தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களை இங்கு ஒவ்வொன்றாக காணலாம்.
- மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தம் கொண்டு வரப்படும்.
- ஆளுநர் நியமனத்தில் மாநில அரசுகளின் ஆலோசனை கேட்கப்படும்.
- ஆளுநருக்கு முக்கியத்துவம் அளிக்கும் சட்டப்பிரிவு 361 நீக்கப்படும்.
- உச்ச நீதிமன்றம் கிளை சென்னையில் தொடங்கப்படும்
- புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படும்.
- ஒன்றிய அரசு பணிக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அறிவிப்பு
- ஒன்றிய அரசு சார்ந்த அறிவிப்பில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியாகும்.
- திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
- அனைத்து மொழிகளுக்கும் சமமான அளவில் நிதி ஒதுக்கப்படும்.
- இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்களுக்கு இந்தி குடியரிமை வழங்கப்படும்.
- மீண்டும் ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு பழைய சலுகைகள் வழங்கப்படும்.
- புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும்.
- மகளிருக்கான 33% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
- நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும்.
- இந்திய முழுவதும் உள்ள மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகையாக வழங்கப்படும்.
- தமிழ்நாட்டில் நீட் விலக்கு அளிக்கப்படும்
- மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன்.
- வங்கிகளில் போதிய இருப்பு இல்லை என விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
- CAA ரத்து செய்யப்படும்.
- சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்.
- GST சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.
- தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
- நாடு முழுவதும் கல்விக்கடன் ரத்து செய்யப்படுகிறது.
- எல்பிஜி ரூ. 500, பெட்ரோல் ரூ. 75, டீசல் ரூ.65 என்ற விலையில் விற்கப்படும்.
- 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக ஆக உயர்த்தப்படும்.
- மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும்.
- தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்
திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் 14 கூட்டங்களை தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டது. அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பிப்ரவரி 5 அன்று தூத்துக்குடியில் தொடங்கி கன்னியாகுமரி, மதுரை, ஒசூர், கோயம்பத்தூர், திருப்பூர், சேலம், வேலூர், ஆரணி, விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு, தொழிற்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை நேரடியாக பெற்றனர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் கனிமொழி தலைமையில் 38 மாவட்டங்களில் இருந்து 1100 க்கும் மேற்பட்ட சங்கங்களை சந்தித்து அதன் வாயிலாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கருத்துக்களை பெற்றனர். இந்நிகழ்வுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிகழ்வில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.
அனைவரையும் உள்ளிடக்கிய அறிக்கை
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சிக்காக, அறிவிக்கப்பட்ட உதவி எண் வாயிலாக 30,000-க்கும் மேற்பட்ட அழைப்புகளின் கருத்துக்களும், மின்னஞ்சல்கள் மூலமாக 15,000க்கும் மேற்பட்ட கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல் சமூக ஊடக பதிவுகளில் இருந்து 20,000-க்கும் மேற்பட்ட கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள இயலாதவர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு அஞ்சல் வாயிலாக 7000க்கும் மேற்பட்ட கருத்துக்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வு மார்ச் 3ஆம் தேதி அன்று தஞ்சாவூரில் நிறைவுற்றது. அதன் பின் குழு சார்ந்த உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்து திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ