செந்தில் பாலாஜி வழக்கு: முதலமைச்சருக்கே முழு அதிகாரம் - உயர் நீதிமன்றம்
துறை ஏதும் இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீடிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த அனைத்து வழக்குகளின் விசாரணை தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நடைபெற்றது. விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில், அமைச்சரவையின் திருப்தி அடிப்படையில் மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும் என்றும், அமைச்சரவைக்கு இணையாக நிர்வாகம் நடத்த ஆளுநருக்கு அரசியல் சட்டம் அதிகாரம் வழங்கவில்லை என்றும், குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிக்க எந்த இடையூறும் இல்லை என்றும் வாதிடப்பட்டது.
மேலும் படிக்க | உதயநிதி அடித்த கிண்டலில் கடுப்பான சர்ச்சை சாமியாரின் ரியாக்ஷன்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாக ஆளுனர் செயல்பட முடியாது என்றும், அவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் குற்ற பின்னணி, சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறி செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை விரும்பவில்லை என முதல்வருக்கு ஆளுனர் கடிதம் எழுதியதாகவும், அதன் பின் உரிய காரணங்களை குறிப்பிட்டு செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜியால் அரசு பணியாற்ற முடியாது என்பதால் அவர் அமைச்சராக நீடிக்க முடியுமா என்ற கேள்வி முதல் முறையாக எழுந்துள்ளது என்றும், தன் கண்முன் நடக்கும் சட்டவிரோதங்களை கண்டு, சட்ட அதிகாரம் இல்லை என ஆளுநர் இருக்க முடியாது என்றும் வாதிடப்பட்டது.
தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேவலு ஆகியோர், முதலமைச்சர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனடிப்படையில் மனுதாரர்கள் கொண்டுள்ள கவலை நியாயமானதுதான் என குறிப்பிட்டுள்ளனர். மேலும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு எதிரானது மட்டும் அல்லாமல், தார்மீக அடிப்படையில் சரியானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதால் எந்த பலனும் இல்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளில் எந்த உத்தரவு பிறப்பிக்க இயலாது என கூறியதுடன், செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க | ஆளுநரின் கையெழுத்துக்காக காத்திருக்கும் 49 சிறைவாசிகளின் விடுதலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ