சென்னை: தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வைகோவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னையில் ஜூலை மாதம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் உரையாற்றியபோது, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எம்.பி, எம்.எல்.ஏகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், வைகோவிற்கு ஓராண்டு சிறைதண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. 


இதனையடுத்து, தற்போது சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.


அந்த மனுவில், தனக்கு எதிராக போதிய ஆராதங்கள் இல்லாத நிலையிலும், சட்டத்திற்கு புறம்பாகவும் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 


தேச துரோக குற்றச்சாட்டுகளுக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில் தான், என்னை குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரு வழக்கை எதிர்கொண்டபோது தந்தை பெரியார் கேட்டது போல், அதிகபட்ச தண்டனை எனக்கு கொடுங்கள் என தாம் கேட்டிருந்த நிலையில், குறைந்தபட்ச தண்டனை கேட்டதாக நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டு கையெழுத்திட்டிருந்ததாகவும் மனுவில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.


2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி தமிழீழ விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இறந்தார் என்பதற்கோ, அதனால் தமிழக மக்களின் மனநிலை ஆவேச நிலையில் இருந்தது என்பதற்கோ, மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தது என்பதற்கோ எவ்வித ஆதாரங்களையும் காவல்துறை தாக்கல் செய்யவில்லை என்றும் வைகோ மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கவனத்திற்கு வந்த தகவல்களின் அடிப்படையிலும், அனுமானத்தின் அடிப்படையிலும் நீதித்துறை சார்ந்த முடிவுகள் எடுக்கப்பட கூடாது என்றும், ஆனால் இதுபோன்ற காரணிகள் நீதிபதியின் மனதில் கோலோச்சியதால்தான் தான் குற்றவாளி என தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வைகோ தனது மனுவில் முறையிட்டுள்ளார்.


இந்தநிலையில், வைகோ மேல்முறையீடு மனு மீதான விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வைகோவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். 4 வாரத்திற்குள் வழக்கு தொடர்பாக ஆயிரம் விளக்கு ஆய்வாளர் உரிய பதிலளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் பேசுவதற்கு முன் இருமுறை யோசிக்கும்படி வைகோவுக்கு அறிவுறுத்தும்படி நீதிபதி கூறியுள்ளார்.