தமிழக அரசுக்கு ரூபாய் 100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர்நிலைகளை பராமரிக்க தவறியதாக சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜவஹர்லால் சண்முகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். 


ஜவஹர்லால் சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கடந்த 2014-15ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சென்னையில் உள்ள கூவம் ஆறு முழுமையாக சீரமைத்து மீட்டெடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். 


அதன்படி, அத்திட்டத்திற்கு ரூ.1,934 கோடியே 84 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.  இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால், இதுவரை அமல் படுத்தப்படவில்லை. எனவே, பொதுப்பணித்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.


இதனையடுத்து கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர்நிலைகளை பராமரிக்க தவறியதாக தமிழக பொதுப்பணித்துறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூபாய் 100 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது.


இந்த மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது. வழக்கின் விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீர்நிலைகளை சுத்தப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கருத்தில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.


இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், மனுவுக்கு பதிலளிக்க பசுமைத் தீர்ப்பாயத்துக்கும், வழக்கு தொடர்ந்த ஜவகர்லால் சண்முகத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.