பழனியாண்டவனிடம் ஆட்டைய போட்ட ஊழியர்.. சிசிடிவி வடிவில் சிக்க வைத்த முருகன்
உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ராமகிருஷ்ணன் என்ற தூய்மை பணியாளர் எண்ணிக் கொண்டிருந்த பணத்தை திருடி மறைத்து வைப்பது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது தெரிய வந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணியின் போது , சுமார் 93 ஆயிரம் ரூபாயை திருடிய தூய்மை பணியாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் (Pazhani) அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.
நாள்தோறும் குறைந்த பட்சம் 50 ஆயிரம் பக்தர்கள் வரும் நிலையில் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு முருகப்பெருமானை தரிசிக்க வருவது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது ஐயப்ப (Lord Iyappa) பக்தர்கள் சீசன் மற்றும் தைப்பூசம் காரணமாக பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் தங்களது காணிக்கையை செலுத்துவது வழக்கம். பணம், தங்க வெள்ளி நகைகள் அமெரிக்க டாலர்கள் என பல்வேறு வகையான காணிக்கைகளை பக்தர்கள் நேர்திகடனாக செலுத்துவார்கள்.
இதற்காக கோவில் வளாகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை மாதம் ஒருநாள் திருக்கோயில் வளாகத்தில் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், வங்கி ஊழியர்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
ALSO READ | டாஸ்மாக் பாரில் பிறந்த நாள் கொண்டாட்டம்: இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு
இந்த நிலையில் இந்த மாதம் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது நடந்து வருகிறது. தற்போது கோவில் வளாகத்தில் வங்கி ஊழியர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்டியல் எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ராமகிருஷ்ணன் என்ற தூய்மை பணியாளர் எண்ணிக் கொண்டிருந்த பணத்தை திருடி மறைத்து வைப்பது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது தெரிய வந்தது.
இதையடுத்து கோயில் ஊழியர்கள் ராமகிருஷ்ணனை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது ராமகிருஷ்ணன் கோவில் உண்டியல் பணத்தில் இருந்து 93,100 ரூபாயை திருடி (Theft) மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பணத்தைப் கோவில் ஊழியர்கள் பறிமுதல் செய்து, திருட்டில் ஈடுபட்ட ராமகிருஷ்ணனை அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பணம் திருடி பிடிபட்ட ராமகிருஷ்ணன் பழனி அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் கல்லூரியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், ராமகிருஷ்ணன் இதுபோல இதற்கு முன்னரும் உண்டியல் எண்ணிக்கையில் கலந்துகொண்டு பணத்தை திருடி உள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
ALSO READ | சதுரங்கவேட்டை பட பாணியில் இரிடியம் மோசடி; 10 பேர் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR