மாயாவதி விவகாரம் :முதல்வர் ஜெயலலிதா கண்டனம்
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை, உத்தரப்பிரதேச பாஜக பிரமுகர் தயாசங்கர் சிங் தரக்குறைவாக விமர்சித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து, முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஒடுக்கப்பட்டவர்களின் நிகரில்லாத் தலைவராக மதிக்கப்படுபவர் மாயாவதி. அண்மையில் குஜராத்தில் நடந்த நிகழ்வைக் கண்டித்து, கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் அவர் குரல் கொடுத்து வருகிறார். அதன் காரணமாகவோ, என்னவோ உத்தரப்பிரதேச மாநில பாஜக பிரமுகர்களில் ஒருவரான தயாசங்கர் சிங், மிகவும் மோசமான, ஆபாசமான, அருவருக்கத்தக்க வகையில் மாயாவதியை விமர்சித்துள்ளார். தயாசங்கர் சிங் பயன்படுத்திய வார்த்தைகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை; அவர் சார்ந்துள்ள பாஜகவுக்கு பெரும் இழுக்கை தேடித் தருவதாக உள்ளது.
இதயம் கசிந்து உருகுகிறது: அரசியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள பெண்கள் இதுபோன்ற கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. எனது அரசியல் வாழ்வில் இதுபோன்ற துன்பங்களை அனுபவித்துள்ளேன்.வார்த்தை சவுக்கடிகளால் தாக்கப்பட்டுள்ள மாயாவதிக்காக எனது இதயம் கசிந்து உருகுகிறது. பெண் அரசியல்வாதிகள் மீது தொடுக்கப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் இத்துடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். தயாசங்கர் சிங்கின் விமர்சனத்துக்கு, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்திருப்பதும், தயாசங்கர் சிங்கை கட்சிப் பதவியில் இருந்து நீக்கியிருப்பதும் ஆறுதல் அளிக்கிறது.
ஆனாலும், இந்த நடவடிக்கை போதுமானது அல்ல; பெண்ணினத்தை அவமதித்த தயாசங்கர் சிங்கை, பாஜகவில் இருந்தே நீக்க வேண்டும் என அந்தக் கட்சியின் தலைவரை கேட்டுக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.