பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய “பாரத் பந்திற்கு” மதிமுக ஆதரவு கொடுப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வுக்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றநிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா கூறுகையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் சாதாரண மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


ரூ.11 லட்சம் கோடி எரிபொருள் திருட்டு, கலால் வரி மற்றும் வாட் வரியை உடனடியாக குறைக்க வேண்டும் மற்றும் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்  எனவும் இந்த போராட்டம் மூலம் வலியுறுத்தப்படும். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் பொதுசெயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மேலும், பந்த் வெற்றியடைய மதிமுக அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.