மெட்ரோ ரயில் சேவை துவக்கி வைத்தார் முதல்வர் ஜெ.,
முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்தார்.
முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை, 11:00 மணிக்கு, தலைமைச் செயலக வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், 197 புதிய அரசு பஸ்களை, கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, 11:30 மணிக்கு, சென்னை விமான நிலையம் - சின்னமலை இடையிலான, மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் துவக்கி வைத்தார்.
முதல் ரயில் பயணிகள் யாரும் இன்றி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அடுத்த ரயிலில், மத்திய அமைச்சர்கள், வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
மெட்ரோ ரெயிலுக்கான கட்டணம்:-
முதல் 2 கி.மீ - ரூ.10
2 முதல் 4 கி.மீ - ரூ.20
4 முதல் 6 கி.மீ. - ரூ.30
6 முதல் 8 கி.மீ - ரூ.40
8 முதல் 10 கி.மீ - ரூ.5௦
10 முதல் 15 கி.மீ- ரூ.60.
இந்த விழாவில் முதல்வர் பேசியதாவது:- சென்னை மெட்ரோ ரயில் சேவை தற்போது சுமார் 20 கி.மீ., தூரத்திற்கு வழங்கப்பட உள்ளது. சென்னையை நவீன நகரமாக்கும் எனது முயற்சியின் ஒரு அங்கமாக மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில்சேவை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முழு அளவில் ஒத்துழைத்து வருகிறது. கடந்த 2003ல் நான் முதல்வராக இருந்த போது தான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முழு அறிக்கை தயார் செய்யப்பட்டது. தமிழகத்தின் மேம்பாட்டிற்காக பொன்ராதாகிருஷ்ணன் உழைத்து வருகிறார். தமிழகத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகளுக்கு ஜப்பான் உதவி வருவதற்கு நன்றி தெரிவத்து வருகிறேன் எனக்கூறினார்.