எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக ’மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குனர் நாராயணன்; சென்னை உயர் நீதிமன்றம் ‘அரசு சார்பில் கொண்டாடப்படும் விழாக்களில் கூட்டத்தை காண்பிப்பதற்காக அரசுப்பள்ளி மாணவ-மாணவியரை அழைத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும்’ என மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.


இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்பட இதுபோன்ற அரசியல் பொது நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ-மாணவியரை அழைத்துச் செல்ல இடைக்கால தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. 


இந்நிலையில் இந்த இடைக்கால தடையினை நீக்கக்கோரி, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை துணைச் செயலாளர் பி.சேகர் நேற்று முன்தினம் அவசர மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.


அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினில் தன்னம்பிக்கை பேச்சாளர்கள் மூலம் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைப்பதற்கும், தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும், போட்டித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும் வழிவகுக்கும். எனவே, ஐகோர்ட்டு பிறப்பித்த தடையை நீக்கிவிட்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு மாணவ-மாணவிகளை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும்’ என குறிப்பிடப் பட்டிருந்தது.


இந்த மனுவை நேற்று(வியாழன்) விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது, மேலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளில் மாணவ-மாணவியர்கள் கலந்து கொள்ளவும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் பரிசுகளை பெறுவதற்கும் எந்த தடையும் இல்லை. அதேபோன்று, தனிப்பட்ட முறையில் மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடனோ அல்லது நண்பர்களுடனோ இந்த விழாவில் கலந்து கொள்ளவும் தடை இல்லை.


மாறாக பள்ளி சீருடை மற்றும் அடையாள அட்டையுடன் பள்ளியில் இருந்து மொத்தமாக மாணவ-மாணவிகளை அழைத்து செல்ல மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது!