உற்பத்தியாளர்களின் கவலையை நிவர்த்தி செய்வே பால் விலை உயர்வு: ஜெயக்குமார்!
கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும் என பால் உற்பத்தியாளர் கோரிக்கை வைத்ததால் தான் பாலின் விலை உயர்த்தபட்டது!!
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நுகர்வோர்களுக்கு தரமான பால் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் விதமாக விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது. ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும் என பால் உற்பத்தியாளர் கோரிக்கை வைத்ததால், பால் விலையேற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் ஆடி இசை திருவிழா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், பால் கொள்முதல் விலை குறித்து ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையையடுத்தே தற்போது பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், திமுக ஆட்சியிலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், பால் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை எதிர்கொள்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக, மாநிலத்தில் பால் விலையை உயர்த்தியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.