`நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்` - பட்ஜெட் அறிவிப்பால் கண்சிவந்த ஸ்டாலின்
MK Stalin Boycotting Niti Ayog Meeting: மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் தூரோகம் என விமர்சித்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
MK Stalin Boycotting Niti Ayog Meeting: மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "மூன்று ஆண்டுகளாக சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு தரவில்லை. அதேபோல தமிழ்நாட்டிற்காக நான் வைத்திருந்த எந்த கோரிக்கைகளையும் நிதி அமைச்சார் நிர்மலா சீதாராமன் செய்யவில்லை. மைனாரிட்டி பாஜகவை ஆட்சியில் அமர்த்திய மாநிலங்களுக்கு ஒரு சில திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். அறிவித்திருக்கிறார்களே ஒழிய அதையும் நிறைவேற்றுவர்களா என்பது சந்தேகம்தான்.
எப்படி தமிழ்நாட்டிற்கு மெட்ரோ ரயில் திட்டங்களை அறிவித்துவிட்டு நிதி ஒதுக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ, அதே மாதிரி அந்த மாநிலங்களுக்கும் எதிர்காலத்தில் நடக்கலாம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. தமிழ்நாடு இரண்டு மிகப்பெரிய பேரிடர்களை சந்தித்துள்ளது. இதற்காக ரூ. 37 ஆயிரம் கோடி வரை இழப்பீடு கேட்கப்பட்டது. ஆனால் இதுவரை ரூ.276 கோடி தான் வழங்கியிருக்கிறார்கள். அதுவும் சட்டப்படி வரவேண்டிய தொகைதான்.
முதல்வர் செய்தியாளர் சந்திப்பு:
நீதி இல்லை, அநீதி தான் உள்ளது...
இதில் என்ன வேடிக்கை என்றால் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சர்கள் நேரடியாக வந்து பார்த்து சென்றார்கள். இதுதான் தமிழ்நாட்டு மக்களை பாஜக மதிப்பதா? என்பதுதான் என்னுடைய கேள்வியாக உள்ளது. தமிழ்நாட்டிற்கான எந்த சிறப்பு திட்டமும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இல்லை. நம்முடைய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
தமிழ்நாட்டை மட்டுமல்ல பாஜகவை தூக்கி பிடிக்காத மற்ற எல்லா மாநிலங்களையும் இதில் புறக்கணித்துள்ளனர். சிந்தனையிலும், செயலிலும் தமிழ்நாடு இல்லை. பாரபட்சமான ஏமாற்றம் தான் இந்த அறிக்கையில் உள்ளது. ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கையானது, அந்த நாட்டில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த நிதிநிலை ஒதுக்கீட்டில் நீதி இல்லை, அநீதி தான் உள்ளது.
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறோம்
அரசியலை தேர்தல் களத்தில் பார்த்துக் கொள்ளலாம், இப்போது எல்லாரும் நாட்டுக்காக இணைந்து பணியாற்ற வேண்டும் என நேற்றுதான் பிரதமர் கூறியிருந்தார். ஆனால் அவர் சொன்னதற்கு எதிராக இன்று அவருடைய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்கும் நன்மைகளை செய்வதுதான் சிறந்த அரசு என நான் தொடர்ந்து கூறி வருகிறேன். அப்படி தான் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் இருக்கிறது. இதை பார்த்தாவது மத்திய அரசு தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
வரும் ஜூலை 27ஆம் தேதி டெல்லியில் பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுருந்தது. அதில் நானும் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டிக்கும் வகையில், அந்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்க உள்ளேன்.
திருக்குறள் கூட இல்லை...
தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதுதான் சரியானதாக இருக்கும் என நான் எண்ணுகிறேன். தமிழ்நாட்டின் தேவைகளை, உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராடுவோம்.
நாளைய தினம் நம்முடைய எம்பிக்கள் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர். அதற்கு அனுமதியும் கொடுத்துள்ளோம். தமிழ்நாட்டு மக்கள் மீது பாஜகவினர் ஆத்திரத்தில் உள்ளனர். தமிழ்நாட்டை மட்டுமல்ல திருக்குறளையும் பிடிக்கும் என்றார்கள். இப்போது திருக்குறளும் அதில் இல்லை. மத்திய அரசை இதுவரை எப்படி கையாண்டு கொண்டிருக்கிறோமோ அதே மாதிரி இப்போதும் கையாளுவோம்", என்றார்.
திமுக எம்பிக்கள் போராட்டம்
மேலும், மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததால் என்ன செய்வீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "இதுவரை எப்படி சமாளித்தோமோ, அதே போல் தொடர்ந்து நடைபெறும். நாளை டெல்லியில் திமுக கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடைபெறுகிறது, அதற்கு ஒப்புதல் அளித்துள்ளேன்" என்றார்.
'கோபத்தில் பிரதமர்'
40க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதால் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை; அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் கோபத்தில் இருக்கிறார்" என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ