சி.பி.ஐ.யின் இயக்குநர் திரு அலோக் வர்மாவை, பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் மாற்றியிருப்பது கண்டனத்திற்குறியது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...


"நேர்மையாகவும், சுதந்திரமாகவும், சட்ட நெறிமுறைகளின் படியும் செயல்பட வேண்டிய நாட்டின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குநர் திரு அலோக் வர்மாவை, பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் மாற்றியிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு புகார்களுக்கு உள்ளான திரு ராகேஷ் அஸ்தனாவை சி.பி.ஐ அமைப்பிற்குள் பிரதமர் நரேந்திர மோடி வலுக்கட்டாயமாக திணிப்பதை எதிர்த்து துவக்கத்திலிருந்தே சி.பி.ஐ இயக்குநர் போர்க்கொடி உயர்த்தி வந்ததை நாடே அறியும். ஆனால், அப்போது எல்லாம் பிரதமர் அலுவலகம் அமைதி காத்தது. பிரதமரும் அமைதி காத்தார்.


சிறப்பு இயக்குநர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான டி.எஸ்.பி.யை நீதிமன்றம் “ஏழு நாள் சி.பி.ஐ கஸ்டடிக்கு” அனுப்பி - அந்த கஸ்டடி விசாரணை துவங்கும் நேரத்தில் சி.பி.ஐ இயக்குநர் அதிரடியாக மாற்றப்பட்டிருப்பதில் நிறைய மர்மங்கள் இருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற்றுள்ள கொலீஜியத்தால் தேர்வு செய்யப்பட்ட இயக்குநருக்கு “பணிக்கால பாதுகாப்பு” (Tenure) இருக்கும் நிலையில், அவரை மாற்றியிருப்பது எதேச்சதிகாரச் செயல் மட்டுமின்றி - பா.ஜ.க. அரசின் “நிர்வாக அராஜகமாகவே” பார்க்க முடிகிறது. சில வாரங்களுக்கு முன்புதான் நாட்டை உலுக்கிய ரஃபேல் ஊழல் புகாரினை நேரடியாக பெற்றுக் கொண்டார் சி.பி.ஐ இயக்குநர்.


தனக்கும், தனது அரசுக்கும் எதிரான புகாரைப் பெற்றுக் கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு சி.பி.ஐ அமைப்பையே தகர்த்தெரியும் விதத்தில் “அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி” நடந்து கொண்டிருப்பது போன்றதொரு தோற்றத்தை அந்த அமைப்பின் இயக்குநரை மாற்றியதன் மூலம் பிரதமர் மோடி உருவாக்கியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.


தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க அமைச்சர் திரு விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி மீது சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மிகவும் சென்சிட்டிவான வழக்குகளை விசாரித்து வரும் சி.பி.ஐ. அமைப்பிற்கு அப்பழுக்கற்ற, நேர்மையான தலைமைக்குணம் படைத்த ஒரு இயக்குநர் இருக்க வேண்டிய இந்த நேரத்தில், மிகவும் ஜூனியர் அதிகாரியை நியமித்து, சி.பி.ஐ. அமைப்பை தங்களின் “கூண்டுக்கிளி”யாக்கியுள்ளது பா.ஜ.க. அரசு.


தேர்தல் நேரத்தில் சி.பி.ஐ அமைப்பை எதிர்கட்சிகள் மீது பயன்படுத்தவும், “ரஃபேல் ஊழல்” குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கவும் இது மாதிரியான தந்திரங்களில் ஈடுபட்டு, அதிரடி மாற்றங்கள் மூலம் சி.பி.ஐ அமைப்பின் சுதந்திரம், நம்பகத் தன்மை, தன்னாட்சி அதிகாரம் எல்லாவற்றின் மீதும் போர் தொடுத்திருப்பதை துளி கூட ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே சி.பி.ஐ இயக்குநர் திரு அலோக் வர்மா மாற்றிய உத்தரவை உடனடியாக பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்!