தமிழக உணர்வுகளை அவமதித்த பாஜக அரசை கண்டித்து தீர்மானம் போடுங்கள்: ஸ்டாலின்
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக உணர்வுகளை அவமதித்த பாஜக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என சட்டமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
"நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், சட்டமன்ற அதிகாரத்தை சிறுமைப்படுத்தி, தமிழக உணர்வுகளை அவமதித்த பாஜக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றிடுக” என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்,
அதுக்குறித்து அவர் உரையாற்றி பேசியது,
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு முழு விலக்களிக்க வேண்டுமென்று கடந்த 01-02-2017 அன்று சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர்ந்து இரு மசோதாக்களை ஏகமனதாக நிறைவேற்றி அனுப்பினோம். அந்த மசோதாக்களை மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் 18-02-2017 அன்று மேதகு குடியரசு தலைவர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 246ன் கீழ், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ள ஒத்திசைவுப் பட்டியல் என்று வகைப்படுத்தி, அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுவே, கூட்டாட்சியின் தத்துவமாக, அரசியல் சட்டத்தின் போற்றத்தக்க மாண்பாக விளங்குகிறது. எனவே, மத்திய அரசுக்கு எப்படி சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளதோ, அதேபோல மாநில அரசுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
மருத்துவக் கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் 25வதாக இணைக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்பு சட்டம் 254/2ன் கீழ், ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள பொருள்கள் குறித்தும் சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டமன்றத்துக்கு உள்ளது. அதன்படி, பாராளுமன்றத்துக்கு இணையாக மாநில சட்டமன்றங்களின் இறையாண்மையை, அரசியல் சட்டத்தை பாதுகாத்து வைத்திருக்கின்றனர்.
ஆனால், இன்றைக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையை, சட்டம் இயற்றும் அதிகாரத்தை, அரசியல் சட்டம் வகுத்துள்ள கூட்டாட்சி முறையை கேள்விக்குள்ளாக்கும் வகையில், நீட் மசோதாக்கள் 27 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இத்தகைய நீண்டநெடிய தாமதம் வரலாற்றில் ஏற்பட்டுள்ளதா என்பது சந்தேகத்துக்குரியது.
நீட் மசோதாக்களை நிறைவேற்ற வேண்டுமென்று மத்திய அரசை சட்டமன்றம் மூலமாகவும், பாராளுமன்றத்தின் இரு அவைகள் மூலமாகவும் நாம் வலியுறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், மவுனம் சாதித்துக் கொண்டிருந்த பாஜக அரசு, இப்போது உயர் நீதிமன்றத்தில் நடந்து வழக்கில் திடீரென்று ’தமிழகத்தின் நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன’ என்று அறிவித்திருக்கிறது. இது தமிழகத்தை மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
மசோதாக்களை நிராகரித்த தகவலைக் கூட மாநில சட்டமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை கண்ணியம் கூட காணாமல் போயிருக்கிறது. இது உள்ளபடியே வேதனைக்குரியது. கூட்டுறவுக் கூட்டாட்சி என்ற தத்துவமே குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி என்று நான் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஆகவே, அரசியலமைப்பு சட்டப்படி, சட்டமன்றத்துக்கு அளித்துள்ள இறையாண்மையாக அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ள சட்டம் இயற்றும் முக்கியமான அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. மாநில மக்கள் மன்றமாக உள்ள சட்டமன்றத்தின் ஆணிவேர் இன்றைக்கு மாய்க்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் இந்த விநோதமான செயல் மிகவும் கண்டனத்துக்குரியது என்று இந்த அவையில் நான் பதிவு செய்கிறேன்.
குறிப்பாக, நீட் தேர்வு ஏற்படுத்திய ஏமாற்றத்தால் மனமுடைந்து தமிழகத்தில் பல மாணவியர் தற்கொலை செய்துகொண்ட, கண்ணீர் வரவழைக்கும் கையறு நிலையில், தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டது.
ஆகவே, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கும் இரு மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல, சட்டமன்றத்தில் சட்டம் இயற்றும் அதிகாரத்தை, சாதாரணமாக சிறுமைப்படுத்தி, தமிழகத்தின் உணர்வுகளை அவமதித்துள்ள மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒரு கண்டன தீர்மானத்தை இந்த அவையில் கொண்டுவந்து, ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும்.
மேலும், மக்களுடைய நலன்களை பேணவும், மாநிலத்தின் உணர்வுகளை மதிக்கவும், தமிழக மக்களின் விருப்பத்தையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றவும், சட்டமன்றத்துக்கு இருக்கக்கூடிய இறையாண்மையை பாதுகாக்கவும், சட்டப்பூர்வமான மாமருந்து தேடி உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
இதில் தாமதம் செய்தாலோ, தயக்கம் காட்டினாலோ, வரலாற்றுப் பிழையை இழைத்தவர்கள் ஆவீர்கள். எதிர்கால ஜனநாயக சமூகம் இதை மறக்காது, மன்னிக்காது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.