அதிமுக ஆட்சியின் ஊழல்களை பட்டியலிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்
அதிமுக ஆட்சியால் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்களை பட்டியலிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
அதிமுக ஆட்சியால் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்களை பட்டியலிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
அதன் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
“மக்களிடம் செல்வோம்; சொல்வோம்! மாற்றம் காண்போம்!”
என் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே!
திக்கெட்டும் அதிரும் வகையில் கழகத்தின் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைவர்க்கும் நிறைவளிக்கும் வண்ணம் நடைபெற்று வருவதை ஒவ்வொரு மாவட்டக் கழகத்தின் வாயிலாகவும் அறிந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். பொதுக்கூட்டங்களின் நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டவே இந்த மடல் எழுதுகிறேன்.
அக்டோபர் 02, உத்தமர் காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள். இந்த நாடு அமைதியும், வளமும் பெற வேண்டும் என மனதார விரும்பிய மகத்தான தலைவர். ஆனால், அவரது எண்ணத்தைச் சிதைக்கும் வகையில், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்பவர்கள் இந்திய நாட்டையும் அதன் அங்கமான தமிழ்நாட்டையும் கலவரக் காடாக்கி, மதம், கலாச்சாரம், இனம், மொழி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, அமைதியைக் குலைத்து; வளர்ச்சியைப் பின்னடையச் செய்து, கஜானாவைக் கொள்ளையடித்து அனைத்து மக்களையும் பட்டப்பகலிலும் ஏமாற்றும் பம்மாத்துப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
அதிலும் தமிழ்நாட்டில் நடைபெற்று வருவது ஆட்சியல்ல, வெறும் காட்சி. அதுவும் பொம்மலாட்டக் காட்சி. ஏழாண்டுகளாக தமிழ்நாடு அல்லல்களை அனுபவித்து வருகிற அழிவின் நீட்சி. அதனைக் கண்டித்துதான் உத்தமர் காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதிக்கு அடுத்த இரு நாட்களில் அதாவது, அக்டோபர் 3, 4 தேதிகளில் தமிழ்நாட்டில் 120 இடங்களில் கழகத்தின் சார்பில் ஊழல் அரசை உலகுக்குத் தோலுரித்துக் காட்டும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
ஆட்சியாளர்கள் தங்களின் ஊழலை மறைக்க - நிர்வாகச் சீர்கேட்டை பலவித “மேக்கப்புகள்” போட்டு மறைக்கப் பார்க்கிறார்கள். அதில் ஒன்றுதான் சென்னையில் நடந்து முடிந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா. ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக் காலத்திலேயே மறக்கடிக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்டாமல் தன்னுடைய பெயரையே சூட்டிக்கொண்டார் அந்த அம்மையார். 1996ல் கழக ஆட்சி மலர்ந்த பிறகே, அந்தத் திரைப்பட நகர் விரிவாக்கம் செய்யப்பட்டு அதற்கு ‘எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி’ என்ற பெயர் தலைவர் கலைஞர் அவர்களால் சூட்டப்பட்டது.
ஜெயலலிதா அம்மையார் இருக்கும்வரை எம்.ஜி.ஆரைப் புறக்கணித்துவிட்டு, இன்று தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற மேக்கப் போட்டு முதல்வர் - துணை முதல்வர் - பின்னணிப் பாடகரான ஒரு அமைச்சர் உள்ளிட்ட அத்தனை பேரும் அரசு விழா மேடையில் அசத்தலான நடிகர்களாகியிருக்கிறார்கள். ஏதோ எம்.ஜி.ஆருக்கு இவர்கள்தான் பெருமை சேர்க்கிறார்கள் என்பதுபோல, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தலைவர் கலைஞர் அவர்களின் திட்டப்படி - அவரது வழிகாட்டுதல்படி - அவரது மேற்பார்வையுடன் 1996-2001 கழக ஆட்சியில் கட்டடப்பட்டது என்ற வரலாறு எல்லோருக்கும் தெரியும். அதற்கு எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டுகிறார்களாம். ஏன், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அறிவித்தாரே சென்னை வண்டலூர் அருகே மிகப்பெரிய புறநகர் பேருந்து நிலையம் உருவாக்கப்படும் என்று! அது என்னவாயிற்று?
தங்கள் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தை நிறைவேற்றி, அதற்கு தங்கள் கட்சியின் நிறுவனர் பெயரைச் சூட்ட வக்கற்ற - வகையற்ற ஆட்சியாளர்கள் தான், கலைஞர் ஆட்சிக் காலத்தில் நிறைவடைந்து பயன் தந்த ஒரு திட்டத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்டி, அடுத்தவர் குழந்தைக்குத் தன் பெயர் வைக்க ஆசைப்படுகிறார்கள்.
ஆட்சியாளர்களின் லட்சணம் எப்படி இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தினால், வாயைத் திறந்தாலே மு.க.ஸ்டாலின் பொய் பேசுகிறார் என்று அரசு விழாவில் அப்பட்டமான அரசியல் பேசுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க. ஆட்சியாளர்களெல்லாம் அரிச்சந்திரனின் நேரடி வாரிசுகள் என்பதாக நினைத்துக்கொண்டு பழனிசாமி பேசிய நாளிலேயே, அவர்களின் லட்சணம் என்ன என்பதை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் கிழித்துத் தொங்க விட்டிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு “எய்ம்ஸ்” மருத்துவமனையைக் கொண்டுவர வேண்டும் என்பது நீண்டகால முயற்சி. அதனை முறையாக மேற்கொள்ளாமல் அலட்சியம் செய்தது அ.தி.மு.க அரசு. மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசும் இதில் அரசியல் விளையாட்டு ஆடியது. அண்மையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதித்து, 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதைத் தங்களின் சாதனையாக, வழக்கம்போலவே அடுத்தவர் குழந்தைக்குப் பெயர் சூட்டிக் குதூகலம் கொள்ளும் அ.தி.மு.க ஆட்சியாளர்கள், சொல்லிக் கொண்டார்கள். ஆனால் உண்மை என்ன என்பதை தகவலறியும் உரிமைச் சட்டம் சொல்லியிருக்கிறது.
மதுரையைச் சேர்ந்த ஹக்கீம் காசிம் எனபவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்து பெற்ற விவரங்கள் மூலம், மத்திய - மாநில அரசுகள் பச்சைப் பொய் சொல்லியிருக்கின்றன என்பதும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு நிதி எதுவும் இதுவரை ஒதுக்கப்படவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது. இதற்கும் மேலாக, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத் துறைக்கான அமைச்சகமும் தெரிவித்து விட்டது. அடுத்தவர் குழந்தைக்குப் பெயர் வைக்க ஆசைப்படும் அ.தி.மு.க ஆட்சியாளர்கள், பிறக்காத குழந்தைக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது இப்போது அம்பலமாகியிருக்கிறது.
இப்படிப் பொய்யும், புரட்டும், ஊழலும், கொள்ளையும், சட்ட விரோதமுமே அ.தி.மு.க ஆட்சியின் லட்சணங்களாக இருக்கின்றன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடும் அளவிற்கு ஆட்சியாளர்களின் வரம்பு மீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
அரசுப் பேருந்துகள் - தனியார் பேருந்துகள் ஆகியவற்றை மிரட்டி வரவழைக்கப்பட்டு, உதவி நிதி தருவதாகப் பொதுமக்களை ஏமாற்றி அழைத்து வந்து, அரசு விழாவை நடத்திய அலங்கோலத்தைப் பார்த்து அனைவரும் கைகொட்டிச் சிரிக்கின்றனர். இவை அனைத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் நடவடிக்கையாகத்தான் அக்டோபர் 3 மற்றும் 4 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
எம்.ஜி.ஆர் படத்தின் பாட்டைப் போலவே, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த முதலமைச்சரும் அவருடைய அமைச்சரவையினரும் ஆளுந்தரப்பும் செய்யும் ஊழல்கள் அனைத்தையும் தோலுரித்துக் காட்டி, எத்தனையெத்தனை ரெய்டுகள், என்னென்ன வழக்குகள் என்பதைப் பட்டியலிட்டு, ஆட்சியாளர்களின் உண்மை முகத்தை மக்களிடம் எடுத்துரைத்து அம்பலப்படுத்துவதே கழகப் பொதுக்கூட்டங்களின் நோக்கமாகும்.
உங்களில் ஒருவனான நான் உங்களின் பேரன்புடனும் ஆதரவுடனும் கழகத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, சேலம் மாநகரில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற போது, இந்தக் கொள்ளைக்கூட்ட ஆட்சியின் அவலங்களைப் பட்டியலிட்டுக் காட்டினேன்.
அதிமுக அமைச்சரவையில் எடப்பாடி பழனிசாமியையும் சேர்த்து 33 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அகில இந்திய அளவில் “ஊழல் ஆழமாகக் கறைபடிந்த அமைச்சரவை” இன்றைக்கு தமிழகத்தில் இருக்கிறது.
ஊழலை விசாரியுங்கள் என்று லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் தரப் போனால், அந்தத் துறையின் உயரதிகாரி பாலியல் புகாரில் சிக்குகிறார்.
“லஞ்ச ஒழிப்புத் துறை உயரதிகாரியின் மீதான புகாரை விசாரியுங்கள்” என்று மனு கொடுக்க டி.ஜி.பி.யிடம் போனால் அந்த டி.ஜி.பி. ராஜேந்திரன் குட்கா ஊழலில் மாட்டியிருக்கிறார்.
குட்கா ஊழல் டி.ஜி.பி. மீதும், அமைச்சர் வேலுமணி செய்யும் ஸ்மார்ட் சிட்டி ஊழலையும் விசாரியுங்கள் என்று முதலமைச்சரிடம் மனு கொடுக்கப் போனால் முதலமைச்சர், நெடுஞ்சாலை காண்ட்ராக்ட் ஊழலில் சிக்குகிறார்.
இப்படியொரு ஊழல் ஆட்சியின் “தலைவராக” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
அ.தி.மு.க அரசு ஊழல்களின் “தலைப்புச் செய்திகள்” சொல்ல வேண்டும் என்றால்;
- 400 கோடி ரூபாய் பருப்பு கொள்முதல் ஊழலில் அமைச்சர் காமராஜ்;
- 200 கோடி ரூபாய் அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் மார்க் ஊழல் மற்றும் அனைத்து பல்கலைக்கழக ஊழலில் அமைச்சர் கே.பி. அன்பழகன்;
- 2 ஆயிரம் ஆம்னி பஸ் வாங்குவதில் 300 கோடி ரூபாய் டெண்டர் ஊழலில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்;
- 1000 கோடி ரூபாய்க்கு மேல் முட்டை டெண்டர் ஊழல்;
- 84 கோடி ரூபாய் காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல்;
- மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல்;
என்று 33 அமைச்சர்களுக்கும் பட்டியல் போடலாம்.
நாளொரு ஊழல் பொழுதொரு லஞ்சம் என நாற்றமெடுத்து வரும் ஆட்சி இது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊழல் வெளிப்படுகிறது. மின்துறை அமைச்சர் தங்கமணி மீது காற்றாலை மின்சார ஊழல் வெளிப்பட்டுள்ளது. இதைச் சொன்னதற்காக என் மீது வழக்கு போடுவதாக மிரட்டினார். ஆதாரங்களை வெளியிட்டு, வழக்குப் போட்டுப் பாருங்கள் என்றேன்; 7 நாள் கெடு முடிந்துவிட்டது; வழக்கு போடும் வக்கணை இல்லை.
அண்டப்புளுகு, ஆகாசப் புளுகுகளையெல்லாம் அனாயசமாக மிஞ்சக்கூடிய பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்த ஆட்சியின் முதல்வர், நான் பொய் சொல்வதாகக் கூசாமல் சூப்பர் பொய் சொல்கிறார்.
உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே... உங்களில் ஒருவனான நான் ஆதாரங்களுடன் தான் ஆட்சியின் அவலங்களை அவ்வப்போது அம்பலப்படுத்துகிறேன். அதனைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும்பணி உங்களுடையது.
முரசொலியில் செப்டம்பர் 26, 27, 28 ஆகிய 3 நாட்கள் வெளியான, தொடர் தலையங்கங்களில் அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல் – அராஜக - நிர்வாகச் சீர்கேடுகள் புட்டுப் புட்டு வைக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தொகுத்து உரையாற்றுங்கள்; விளக்கி உரையாற்றுங்கள். சிறு வெளியீடாக அச்சிட்டுக் கொடுங்கள்.
தமிழகத்தின் 120 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்காக கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் ஓடியாடி வேலை செய்து வருவதை உடனுக்குடன் அறிகிறேன். ஒரு பொதுக்கூட்டத்தை இன்னொரு பொதுக்கூட்டம் வெல்ல வேண்டும் என்கிற ஆரோக்கியமான ஆக்கபூர்வமான போட்டி மனப்பான்மையுடன் கழகத்தினர் பணியாற்றும் நிலையில், எந்த இடத்திலும் சுணக்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
கழகத்தினருடன் பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்கும் வகையில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் சிறக்கட்டும்! மக்களிடம் செல்வோம்! மக்களுடன் செல்வோம்! மறைக்கப்படும் ஊழல்களை அக்குவேறு ஆணிவேறாக அம்பலப்படுத்துவோம்! தமிழ்நாடு சீரழிந்து கிடப்பதை எடுத்துரைப்போம். மேடையில் ஒலிக்கின்ற ஒவ்வொரு சொல்லும் ஜனநாயகக் களத்திற்கான ஆயுதங்களாகட்டும்! அந்த ஆயுதத்தை, அறவழிக்களத்தில் கையிலேந்தி ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தொடர்களுக்கு எமுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.