YSR காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ஸ்டாலின்
ஜெகன் மோகன் ரெட்டியின் அழைப்பை ஏற்று, அவரின் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துக்கொள்கிறார்.
2019 மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையோடு மத்தியில் ஆட்சி அமைத்தாலும், ஆனால் ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் YSR காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றதோடு, மாநிலத்தில் ஆட்சியையும் பிடித்தது. மேலும் ஆந்திரா மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு "நோட்டா"வை விட குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி மக்களவைத் தேர்தலும், சட்டசபைத் தேர்தலும் ஒன்றாக ஒரே கட்டமாக ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்றன. அந்த மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் YSR காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒரு வலுவான போட்டி இருந்தது. ஆந்திராவில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு இடையில் கடந்த மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
175 தொகுதிகளை கொண்ட ஆந்திரா சட்டசபை தேர்தலில் YSR காங்கிரஸ் 151 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. அதேபோல 25 மக்களவை தொகுதிகளில் YSR காங்கிரஸ் 22 இடங்களிலும், TDP 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
ஆந்திர முதலமைச்சராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வரும் 30 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். கடந்த 26 ஆம் தேதி டெல்லி வந்த ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மேலும் தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறும் பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார்.
இந்தநிலையில், தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. மேலும் ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டியின் அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருடன் இன்னும் யார் யார் செல்ல இருக்கிறார்கள் என்று அறிவிப்பு வெளியிடப்படவில்லை.