விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் 10 நாட்கள் பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின்
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்யும் நாள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி (Nanguneri), விக்கிரவாண்டி (Vikravandi), தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) இடைத்தேர்தல் (ByElections) நடைபெற உள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்திற்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே ஆளும் கட்சி அதிமுக (All India Anna Dravida Munnetra Kazhagam), எதிர்கட்சி திமுக (Dravida Munnetra Kazhagam) மற்றும் நாம் தமிழர் கட்சி (Naam Tamilar Katchi) போன்றவை தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. ஆனால் யார் போட்டியிடுகிறார் என்ற வேட்பாளர் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை. அமமுக (Amma Makkal Munnetra Kazhagam) விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடாது என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) கட்சியின் தலைவர் கமல்ஹாசன் (Kamal Haasan) இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என அறிவித்துள்ளனர். இந்த அடிப்படையில் பார்த்தால் ஒரு தொகுதியில் அதிமுக மற்றும் காங்கிரஸ் (Congress), மற்றொரு தொகுதியில் அதிமுக - திமுக இடையே நேரடி போட்டியாக இருக்கும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 21 ஆம் தேதி அறிவித்தது. இதனையடுத்து விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவும், நாங்குநேரியில் காங்கிரசும், விக்கிரவாண்டியில் திமுகவும் போட்டியிடுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது.
அதிமுக சார்பாக விக்கிரவாண்டி தொகுதியில் எம்.ஆர். முத்தமிழ் செல்வனும், நாங்குநேரியில் வெ.நாராயணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல திமுக சார்பில் விக்கிரவாண்டியில் புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக விக்கிரவாண்டி தொகுதியில் கு.கந்தசாமி, நாங்குநேரி தொகுதியில் சா.ராஜநாராயணன் வேட்பாளராக அறிவித்தார் சீமான்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி என மூன்று தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரங்களை எப்படி மேற்கொள்வது, அந்த தொகுதிக்கான பிரச்சனைகள் என்ன? யார் எப்பொழுது பிரசாரம் மேற்கொள்ளப்படுவார் போன்ற பிரச்சார யுக்திகளை வகுக்கும் முனையில் அதிமுக மற்றும் திமுக ஈடுபட்டு உள்ளது. மீண்டும் ஒருமுறை இடைத்தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கான நாள் மற்றும் நேரம் குறித்து தலைமை அறிவித்துள்ளது. அதுக்குறித்து திமுக-வின் அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் கூறப்பட்டு உள்ளது.
அதாவது அக்டோபர் 3,4 ஆம் தேதிகளில் விக்கிரவாண்டியிலும், அக்டோபர் 5,6 ஆம் தேதிகளில் நாங்குநேரி தொகுதியிலும் முதற்கட்ட பிரச்சரம் செய்வார். அதன்பின்னர் அக்டோபர் 12, 13, 14, 17, 18, 19 தேதிகளில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார் எனக் கூறப்பட்டு உள்ளது.