காவல்நிலையத்தில் முகேஷ் படுகொலை- நீதி விசாரணை வேண்டும் :வைகோ கோரிக்கை
மணப்பாறை காவல்நிலையத்தில் படுகொலை செய்யப்பட முகேஷ்க்கு நீதி கிடைக்க, பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவிந்தராஜபுரம் துரை என்பவரின் மகன் முகேஷ் (வயது17) என்ற சிறுவனை, 24-ம் தேதி இரவு மணப்பாறை போலீசார், திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
காவல்நிலையத்திலேயே இரண்டு நாட்கள் அடித்து விசாரித்து உள்ளனர். கொடூரமான தாக்குதலால் மயங்கி விழுந்த முகேஷை, உயிருக்கு ஆபத்தான நிலையில், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக 27-ம் தேதி திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் 29-ம் தேதி திங்கள்கிழமை நள்ளிரவில் முகேஷ் உயிர் இழந்தார்.
ஆனால், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உடற்கூறு பரிசோதனை எதுவும் செய்யவில்லை. அன்று இரவே உடலை மணப்பாறைக்குக் கொண்டு வந்து எரியூட்ட முனைந்தனர். இதனால் மணப்பாறையில் அனைத்துக் கட்சியினரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கொதித்து எழுந்து போராட்டக் களத்தில் இறங்கினர். முகேஷ் உடலை உடற்கூறு பரிசோதனை செய்தபிறகுதான் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால் மாற்றுப்பாதை வழியாக உடலை எடுத்துச் சென்ற காவல்துறையினர், நகராட்சி மின் மயானத்தில் அவசரம் அவசரமாக உடலை எரியூட்டி உள்ளனர்.
முகேஷின் பெற்றோர் மிரட்டிப் பணிய வைக்கப்பட்டு உள்ளனர். முகேஷ் கைது, மருத்துவ சிகிச்சை குறித்துப் போலி ஆவணங்களை உருவாக்கி உள்ளனர்.
முகேஷ் படுகொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என ம.தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் கொடுத்துள்ள புகார் மனுவில், அனைத்துக்கட்சியினரும் கையெழுத்து இட்டுள்ளனர். இதன் விளைவாக, கோட்ட ஆட்சியர் விசாரணைக்குப் பரிந்துரை செய்வதாக, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முகேஷைக் கைது செய்த இடத்திலேயே தாக்கியதையும், காவல் நிலையத்தில் அடித்து உதைத்ததை லாக் அப்பில் இருந்து நேரடியாகப் பார்த்த சாட்சிகளும் நேர்காணல் அளித்துள்ளனர்.
இது அப்பட்டமான மனித உரிமை மீறல்; காவல் நிலையப் படுகொலைதான். எனவே, பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும்; இறந்து போன முகேஷின் பெற்றோருக்குப் பத்து இலட்ச ரூபாய் இழப்பு ஈட்டுத் தொகையைத் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
புகாருக்கு உள்ளாகி இருக்கின்ற இன்ஸ்பெக்டர் சிவகுமார், காவலர்கள் தர்மா, பிரடெரிக், பிரேம் ஆகியோர் மீது கொலைவழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்; கொலையை மறைக்க உடந்தையாக இருந்த முகேஷின் தாய்மாமா ராஜேசையும் கைது செய்ய வேண்டும். பிணப்பரிசோதனை செய்யாத திருச்சி மாவட்ட மருத்துவமனை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து, அவர்களைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.