தமிழக அரசின் நிலைப்பாட்டையும், இந்திய அரசின் சுற்றுச்சூழல் சட்டங்களையும் மதிக்காமல் நியூட்ரினோ திட்டத்தைத் செயல்படுத்த நினைக்கும் மத்திய அரசை கண்டித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டு உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த அறிக்கையில் கூறியதாவது:- 


நியூட்ரினோ திட்ட விவகாரத்தில் சட்டத்தையும், தமிழக அரசின் நிலைப்பாட்டையும், மக்களையும் கிஞ்சித்தும் மதிக்காமல் நியூட்ரினோ திட்டத்திற்கு சிறப்பு அனுமதி வழங்க மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் “நிபுணர் மதீப்பீட்டு குழு” முடிவெடுத்திருப்பதை மதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது.


நியூட்ரினோ திட்டத்தில் உள்ள தேச முக்கியத்துவம் காரணமாக சிறப்புத் திட்டமாகக் கருதி செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் தொடக்கத்தில் இருந்தே தமிழக அரசின் நிலைப்பாடானது இந்த திட்டத்திற்கு எதிரானதாகவே இருந்துள்ளது.


நியூட்ரினோ திட்டத்திற்கு சலீம் அலி என்ற நிறுவனம் தயாரித்த சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கையின் அடிப்படையில்தான் 2011ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை “சுற்றுச்சூழல் அனுமதி” வழங்கியது. இந்த அனுமதியைப் பெற்றவுடன், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியைப் பெறாமலே திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இதை எதிர்த்து 2015ஆம் ஆண்டு மதிமுக சார்பில் நான் தொடர்ந்த வழக்கில் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத்தடை விதித்து தீர்ப்பளித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.


அதற்குப் பின்னர் சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை தயாரித்த சலீம் அலி நிறுவனம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாத நிறுவனம் என்பதால் இத்திட்டத்திற்கான அனுமதியை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்து 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரனையின்போது பதில் அளித்த தமிழக அரசு, இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளிக்க பல்வேறு அறிவியல் துறை சார்ந்த அறிஞர்கள் கொண்ட குழுவை உருவாக்கி, அக்குழுவின் அறிக்கை அடிப்படையில்தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி வழங்க முடியும் என தெளிவாகக் கூறியிருந்தது. மேலும்


1. Velraj, Indian institute of energy studies, Anna univ
2. Suresh Gandhi, dept of geology, madras
3.Balàji, retd forest officer
4. Sivaji, dept of nuclear physics, madras
5.Pandurangan, dept of chemistry, Anna Univ
6. Nehru kumar vaithiyalingam, Env health & safety center, Annamalai Univ ஆகியோர் கொண்ட குழுவையும் நியமித்திருந்தது.


பின்னர் இத்திட்டத்திற்கான புதிய சுற்றுச்சூழல் அனுமதிகோரி 2017ஆம் ஆண்டு “டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்” தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பித்தைப் பரிசீலித்த பின்னர் இந்த ஆய்வகத்தை அமைக்க மலையைக் குடையும்போது சக்திவாய்ந்த வெடிமருந்துகள் பயன்படுத்தப்படும், 6 இலட்சம் டன் பாறைகள் தகர்க்கப்படும், மேலும் மேற்குத் தொடர்ச்சி மலை சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பல்லூயிர்ப்பெருக்க இடமாக உள்ளதாலும், அரிய வகை தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பாலூட்டிகள் வாழ்கிறது என்பதாலும், பொட்டிபுரம் மலைப்பகுதி வைகை நதியின் முக்கிய நீராதாரமாக விளங்குவதால் 5 மாவட்ட நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் நீர்ப்பிடிப்புப் பகுதியாக இருப்பதாலும் இத்திட்டத்திற்கு கேட்டகரி ’பி’ அதாவது வெறும் கட்டுமானம் மட்டும் உள்ளடங்கிய திட்டமாக அனுமதி வழங்க முடியாது எனக் கூறியிருந்தது.


மேலும் கடந்த மாதம் தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் பாதிப்பு வருமென்றால் இந்தத் திட்டம் அனுமதிக்கப்படாது எனக் கூறியிருந்தார்.


ஆனால் இந்த வாதங்களை எல்லாம் புறந்தள்ளி நியூட்ரினோ ஆய்வக மையம் தேச முக்கியத்துவம் வாய்ந்தது என்ற காரணத்தைக் கூறி இதை சிறப்புத் திட்டமாகக் கருதி அனுமதி வழங்க முடிவெடுத்துள்ளது மத்திய அரசு.


மேலும் இத்திட்டதால் கதிர் வீச்சு அபாயம் இல்லை, வெடிமருந்து பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது எனவும் கூறியுள்ளது.


சிறப்புத் திட்டமாக எடுத்துக்கொள்ளப்பட்டதால் இனி புதிதாக சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கையும், பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டமும் நடத்தத் தேவையில்லை எனவும் கூறியுள்ளது.


தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியினையும், தேசிய வனவிலங்குகள் நல வாரிய அனுமதியையும் பெற்ற பின்னர் இத்திட்டத்தின் கட்டுமானத்தை தொடங்கலாம் எனவும் கூறியுள்ளது.


இந்த முடிவை எடுத்தால் சட்ட நடவடிக்கைக்கு ஆளாவீர்கள் என கடந்த மாதமே சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நோட்டீஸ் விடுத்திருந்தது.


அதில் “இந்தத் திட்டம் அமைவதற்கு ‘பல லட்சக்கணக்கான’ டன் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பல லட்சம் டன் பாறைகள் உடைக்கப்படும் போது சுற்றுச்சூழலில் பெரிய தாக்கம் ஏற்படும். இப்படிப்பட்ட திட்டத்தை “கட்டுமானத் திட்டமாக” கருத முடியாது என்றும், இத்தகைய திட்டத்திற்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம் “கட்டுமானத்திட்ட பிரிவின்” கீழ் விண்ணப்பிக்கப்பட்டது பிழையானது” என்றும் கூறியிருந்தது. மேலும் இந்த திட்டத்திற்கான ஒப்புதலை வழங்க நடந்த “நிபுணர் மதீப்பீட்டுக் குழு” கூட்டத்தில் இந்திய நாட்டின் “பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம்” னுசுனுடீவை சேர்ந்த நிபுணர்களும் கலந்துகொண்டுள்ளார்கள். இது அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி என்று இதுகாலம் உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லிவந்த திட்டக்குழுவினரின் உண்மை நோக்கமும் இதன் மூலம் வெளிப்படுகிறது.


இப்படி தமிழக அரசின் நிலைப்பாட்டையும் மதிக்காது, இந்திய அரசின் சுற்றுச்சூழல் சட்டங்களையும் மதிக்காமல் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு எடுத்துள்ள இம்முடிவு மாநில சுயாட்சி உணர்வை கடுமையாகப் பாதிக்கும். இந்தியக் கூட்டாட்சி தத்துவத்தையே கேள்விக்குள்ளாக்கும் இந்த நடவடிக்கையை தமிழக நலனில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் கடுமையாக எதிர்க்க வேண்டுகிறேன்.


இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.