உலக நாடுகளில் தமிழை வளர்க்க தமிழக அரசின் புது திட்டம்!
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (24.10.2017) தலைமைச் செயலகத்தில், உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொடையாக வழங்குதல் மற்றும் அரியவகை நூல்கள் மற்றும் ஆவணங்கள் பொது மக்களிடமிருந்து கொடையாக பெறும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களிடம் அரியவகை நூல்களை வழங்கினார்கள்.
தமிழ்நாடு அரசு 2017-18-ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறையின் மானிய கோரிக்கையில், உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொடையாக வழங்குதல் மற்றும் அரியவகை நூல்கள் மற்றும் ஆவணங்கள் பொதுமக்களிடமிருந்து கொடையாக பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
உலக மொழிகளில் தொன்மை வாய்ந்த மொழியாக திகழும் தமிழ் மொழியில், பல்வேறு துறைகளைச் சார்ந்த அரியவகை நூல்கள், ஆவணங்கள் மற்றும் ஓலைச் சுவடிகளை பேணிப்பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் பொருட்டு, பொது மக்கள் மற்றும் தனியார் அமைப்புகளிடமிருந்து அரிய வகை நூல்கள், ஆவணங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை பெறுவதற்கு மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களில் பணிபுரியும் அனைத்து நூலகப்பணியாளர்களும் ஒருங்கிணைந்து அரியவகை ஆவணங்களின் விவரங்களை திரட்டி அவற்றை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம், பொதுமக்கள் மற்றும் தனியார் அமைப்புகள் தம்வசம் உள்ள அரியவகை நூல்கள், ஆவணங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை கொடையாக அருகில் இருக்கும் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் செயல்படும் 2 நூலகங்களுக்கு (மாவட்ட மைய நூலகங்கள், கிளை, ஊர்ப்புற மற்றும் பகுதிநேர நூலகங்கள்) வழங்கிடலாம். இதற்கென, நூலகத்துறைப் பணியாளர்கள், பொதுமக்கள், தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றை அணுகி அரியவகை நூல்கள், ஆவணங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை கொடையாக
பெறுவார்கள். இவ்வாறு அரிய வகை நூல்கள், ஆவணங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை ஒப்படைக்கும் கொடையாளர்கள் நூலக வாரவிழாவின் போது கௌரவிக்கப்படுவார்கள்.
கடல் கடந்து வாழும் தமிழருக்கு உயிர்நாடியாய் விளங்கும் தமிழ் நூலகங்களுக்கு நூல்களை வழங்க தமிழ்நாடு அரசு கருதியதன் முதற்கட்டமாக, பதிப்பாளர்கள், கொடையாளர்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து தமிழில் உள்ள அரும்பெரும் இலக்கியங்கள், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு தொடர்பான நூல்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த புதிய நூல்கள் கொடையாகப்பெற்று, யாழ்பாணத்தில் உள்ள பொது நூலகத்திற்கும், மலேயாப் பல்கலைக்கழகத்திற்கும் பொதுமக்களிடமிருந்து ஒரு லட்சம் அரிய நூல்கள்
கொடையாகப் பெற்று, தாய் நிலத்து தமிழ்ச் சொந்தங்களின் சார்பில் வழங்கப்படும்.
இந்த நிகழ்வின்போது, துணை முதலவர் ஓ. பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் முனைவர் ரெ. இளங்கோவன், பொது நூலக இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) முனைவர் ச. கண்ணப்பன் ஆகியோர் உடனிருந்தனர்