களம் இறங்கும் கமல்ஹாசன்.. அடுத்து விவசாயிகளை சந்திக்கிறார்..
நவம்பர் 4-ம் தேதி விவசாய சங்கப் பிரதிநிதிகளை சந்திக்கும் நடிகர் கமல்ஹாசன், தொடரும் சந்திப்பு, முழு அரசியலுக்கு தன்னை தயார் படுத்துகிறாரா? கமல்ஹாசன்.
கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து அரசை விமர்சித்து வந்தார். இது பெரும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை தந்தது. இதனையடுத்து தமிழக அமைச்சர்கள் வெறும் ட்விட்டர் கருத்து கூறுவதால் எந்த பயனும் இல்லை, களத்தில் இறங்கி வேலை தெரியும் என விமர்சனம் செய்தார்கள்.
கடந்த 28-ம் தேதி எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் நிலக்கரி சாம்பல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பொதுமக்களிடமும் குறைகளையும் கேட்டறிந்தார். இவரது நடவடிக்கையை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல அரசியல் தலைவர்கள் அனைவரும் பாராட்டினார்கள்.
இதைத் தொடர்ந்து அடுத்த நடவடிக்கையாக விவசாய சங்கப் பிரதிநிதிகளை நவம்பர் 4-ம் தேதி சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது கமல்ஹாசனின் அரசியல் பயணம் ஆரம்பமா? என அனைவரும் எதிர்பார்கின்றனர்.