வரும் பாராளுமன்ற தேர்தலில், புதுச்சேரியில் அதிமுக கூட்டணி சார்பில் NR காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது குறித்து தமிழகத்தில் பல கட்சி தலைவர்களும் திடீர் சந்திப்புகள் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடைப்பெற்ற சந்திப்புகளின் விளைவாக இதுவரை கிட்டத்தட்ட கூட்டணி கட்சிகள் முடிவாகி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று வருகின்றன.


தமிழகத்தை பொருத்தவரை இரண்டு பிரதான கட்சிகள், இரண்டு தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதாவது., அதிமுக-பாஜக தலைமையிலான ஒரு கூட்டணி, காங்கிரஸ்-திமுக தலைமையிலான மற்றொரு கூட்டணி என தமிழகத்தில் இரண்டு கூட்டணி உறுதியாகி கூட்டணியில் மற்ற கட்சிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


அந்த வகையில் தற்போது புதுச்சேரி NR காங்கிரஸ், அதிமுக-பாஜக கூட்டணியில் இணைவதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில், புதுச்சேரியில் இருந்து அதிமுக-பாஜக கூட்டணி சார்பாக NR காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக அதிமுக கூட்டணியில் இணைந்த பா.ம.க-வுக்கு 7 தொகுதிகள், பா.ஜ.க-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் NR காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் NR காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


அதிமுக சார்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ், NR காங்கிரஸ் சார்பில் ரங்கசாமி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.