வங்கிகளின் தனியார் மயமாக்கலை நிறுத்த வேண்டும்: சீமான்
கோடிக்கணக்கான மக்களின் சொத்தான பொதுத்துறை வங்கிகளைத் தனியார் பெருமுதலாளிகளின் இலாப வேட்டைக்காகத் திறந்துவிடுவது வன்மையானக் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சி சீமான் எதிர்த்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் வகையில் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வங்கி திருத்தச்சட்ட வரைவினை நிறைவேற்ற முயலும் ஒன்றிய அரசின் முடிவு கடும் அதிர்ச்சி அளிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் சொத்தான பொதுத்துறை வங்கிகளைத் தனியார் பெருமுதலாளிகளின் இலாப வேட்டைக்காகத் திறந்துவிடுவது வன்மையானக் கண்டனத்திற்குரியது.
கடந்த 7 ஆண்டுகால பாஜக அரசின் கொடுங்கோல் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை உள்ளிட்டத் தவறான முடிவுகளால்தான், சுதந்திர இந்தியாவில் இதுவரை சந்தித்திடாத அளவுக்கு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொள்ள நேரிட்டது. இதன் விளைவாக, பல கோடிக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்புகள் பறிபோய், பல இலட்சணக்கான சிறு, குறு தொழில்கள் நலிவுற்று நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமே அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது.
தனியார் மயம், தாராளமயம், உலகமயம் எனும் மிகத்தவறான பொருளாதாரக்கொள்கைகளினால் நாட்டின் பொருளாதாரம் முற்றுமுழுதாகச் சீரழிந்துள்ளது. விளைவாக, தனியார் கூட்டிணைவு நிறுவனங்கள் கொள்ளை இலாபம் ஈட்டுவதோடு, அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தாங்கமுடியாத அளவிற்கு பெரும் இழப்பில் இயங்கி வருகின்றன.
இதனால், இந்திய ஒன்றியமானது, உள்நாட்டு, வெளிநாட்டுப்பெருமுதலாளிகள் வளங்களைச் சுரண்டிக் கொளுத்து , இலாபமீட்டுகிற பெரும் சந்தையாகவும், ஆளக்கூடிய அரசுகள் அதற்கான இடைத்தரகர்களாகவும் மாறி நிற்பது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.
ஏற்கனவே, 14 பொதுத்துறை வங்கிகளை ஒன்றோடொன்று இணைப்புக்கு உட்படுத்தி இருப்பதுடன், காப்பீட்டு நிறுவனங்களையும் முற்று முழுதாகத் தனியாருக்கு விற்கவும் முடிவு செய்துள்ள ஒன்றிய அரசு, தற்போது வங்கிகளையும் தனியாருக்கு விற்பதினால், நாட்டின் பொருளாதாரமே பன்னாட்டுப்பெருமுதலாளிகளை நம்பி நிற்கக்கூடியப் பேராபத்தினை விளைவிக்கும்.
மேலும், பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதன் விளைவாக மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன்கள், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள், சிறு குறு தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் தொழில்கடன்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் கடன்கள் ஆகியவை நிறுத்தப்படக்கூடியப் பேராபத்தினை ஏற்படுத்துவதுடன், கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் தங்கள் விருப்பம் போல் கணக்கற்று உயர்த்தி ஏழை மக்களை வதைக்கவும் வழிவகுக்கும் வாய்ப்புண்டு.
ஆகவே, நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான கிராமங்களின் பொருளாதாரத்தைச் சீரழித்து, அடித்தட்டு மக்களின் சேமிப்பையும், அவர்களின் நல்வாழ்வையும் கேள்விக்குறியாக்கும் வகையில் கொண்டுவரப்படும் ‘வங்கி திருத்தச்சட்ட வரைவினை’ திரும்பப்பெற வேண்டுமென்றும், பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டுமென்றும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினை வலியுறுத்துகிறேன்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR