டெல்லியில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்! பொதுக்குழுவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு
ஜூலை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் இருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் இருக்கும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. கட்சி தலைமை பதவியைக் கைபற்ற எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். ஆனால், அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். கட்சி தலைமை பதவி எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுவிட்டால் கட்சியும், கட்சிக்குள் தனக்கான முக்கியத்துவமும் இருக்காது என்பதை புரிந்து கொண்ட அவர், இவ்வளவு நாள் பொறுமையாக இருந்ததுபோதும், இனிமேலும் அப்படி இருக்க முடியாது என்ற இறங்கி அடிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளார்.
மேலும் படிக்க | கடைசி நேரத்தில் மாறிய காட்சிகள்... அதிமுக பொதுக்குழுவில் என்ன நடக்கப்போகிறது?
எடப்பாடி பழனிசாமியை கட்சி தலைமை பதவிக்கு அடிபோடுவதை முற்றாக நிறுத்த வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராகிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். அமைதியாக இருந்த தன்னை எடப்பாடி தரப்பு கடுமையாக சீண்டிவிட்டதால், அதற்கு தக்கபாடம் புகட்ட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். கட்சி பதவி முதல் முதலமைச்சர் பதவி மற்றும் தேர்தலில் சீட் கொடுப்பது வரை என அனைத்திலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதிக்கம் செலுத்தும்போதெல்லாம் அமைதியாக இருந்த தன்னை, கட்சியில் இருந்தே ஓரங்கட்டும் முடிவுக்கு அவர்கள் வந்ததை ஓ.பன்னீர்செல்வத்தால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் என அனைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றுவிட்டனர். அதனால் கட்சிக்குள் தனக்கு ஆதரவு இல்லை என்பதை புரிந்து கொண்ட அவர், தனக்கு இப்போது இருக்கும் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான அதிகாரம் மற்றும் கட்சிக்கு வெளியே இருக்கும் சிலரின் துணையுடன் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கும் முடிவில் இருக்கிறார். சொல்லப்போனால், இது ஓ.பன்னீர்செல்வத்தின் கடைசி ஆயுதம் தான். தனக்கு இருக்கும் இந்த ஒரே ஆயுதத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவர், டெல்லிக்கு விரைந்து மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
மேலும், தன்னுடைய அரசியல் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளார். அதன் வெளிப்பாடாக தான், பொதுக்குழுவில் பங்கேற்ற கையோடு நேற்றிரவே மகன் ஓபி.ரவீந்திரநாத் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் டெல்லி சென்றார். விடிந்தும் விடியாததுமாக அவசர அவசரமாக தேர்தல் ஆணையத்துக்கு சென்று ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்பாடு செய்துள்ள பொதுக்குழுவுக்கு எதிராக மனு கொடுத்துள்ளார். அவரின் இந்த நடவடிக்கை அதிமுக வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் : இருவருக்கும் செக் வைத்த கட்சி உறுப்பினர்கள்.!
அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பும் தங்கள் சார்பில் தம்பிதுரையை டெல்லிக்கு அனுப்பி அதிமுகவை கைப்பற்ற சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இதை தெரிந்து கொண்ட ஓபிஎஸ், மத்தியில் இருக்கும் சில முக்கிய தலைவர்களையும் சந்திக்க இருக்கிறாராம். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஓபிஎஸ், டெல்லியில் தொடங்கியுள்ள இன்னிங்ஸ் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR