கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து! ஏன் தெரியுமா?
ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்து காரணமாக கருணாநிதி நினைவிடம், சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மட்டுமே நடக்கும் என அறிவிப்பு.
ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் என்பதால், ஆண்டு முழுக்க நூற்றாண்டு விழாவாக கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு மற்றும் தி.முக. கட்சி சார்பில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று மாலை புளியந்தோப்பு பின்னிமில் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் ரெயில் விபத்து காரணமாக, சென்னையில் இன்று மாலை நடைபெற இருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கருணாநிதி நினைவிடம் மற்றும் ஓமந்தூராரில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு மட்டும் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக இதுவரை 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்துக்குப் பிறகு 38 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இன்று வரை தமிழகத்தில் இருந்து 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் ரயில் ரத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு கவுண்டர்கள் அமைத்து கட்டணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து இருப்பதால் நேரடியாக வங்கி கணக்கிற்கு கட்டண தொகை திரும்ப வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 230-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது நாட்டையும் - நாட்டு மக்களையும் உலுக்கி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ள இந்த படுமோசமான விபத்தில் 900-த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இத்தகைய சோகமான சூழ்நிலையில், தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியவர்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், மனித நேயத்திற்காகவும் உரக்கக் குரல் எழுப்பிப் பாடுபட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவது சரியல்ல என்று கழகத் தலைவர் அவர்கள் முடிவு செய்துள்ளார்.
ஆகவே இன்றைய நாள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு மட்டும் மரியாதை செலுத்தி, இந்த பயங்கரமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மற்றபடி, முத்தமிழறிஞர் கலைஞரின் 100-ஆவது பிறந்தநாள் தொடர்பாக இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் - பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. இன்று வடசென்னையில் நடைபெறுவதாக இருந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் வேறொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ