வெளிநாடுகளைப் போல தமிழகத்திலும் தொழில் வளம் பெருகி, மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவே, எட்டுவழிச்சாலைத் திட்டம் கொண்டுவரப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளதாகவும், அந்த கோரிக்கையை நிராகரிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பினை அளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பே தமிழக அரசின் நிலைப்பாடு என கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், எட்டு வழி சாலை திட்டத்திற்கு 89 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறினார். யாரையும் பாதிப்புக்கு உள்ளாக்குவது அரசின் நோக்கம் அல்ல என்றும், எட்டு வழி சாலை திட்டத்தில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். 


மேலும், வெளிநாடுகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 8 வழி சாலை உள்ளது இதனால் அந்த நாடுகளில் தொழில் வளர்ச்சி பெருகியுள்ளதாகவும், அதேபோல் 8 வழி சாலை மக்களுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் என கூறிய அவர், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாலையாக இந்த 8 வழி சாலை இருக்கும் என்றும் தெரிவித்தார்.