தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம்: அரசு பஸ்கள் இயக்கம்
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதவராக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. முழு அடைப்பு போராட்டத்தில், அதிமுக, பாஜக, பாமக, தமாகா, தேமுதிக ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகிய சங்கங்களும் தங்களது முழு ஆதரவை அளித்துள்ளன. இதனால், அனைத்து கடைகளும் மூடப்படும் என தெரிகிறது.
விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடைகள், காய்கறி சந்தைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.
உடுமலையில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. காய்கறி கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோ எதுவும் இயங்கவில்லை.
புதுக்கோட்டையில் பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. தனியார் பஸ்கள் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. குறைந்தளவு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலத்தில் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் முக்கிய சாலைகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
திருச்சியில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. குறைந்தளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.
திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூரில் போக்குவரத்து பணி மனை முன்பு திமுக மற்றும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காய்கறி சந்தைகள் மூடல்விவசாயிகளுக்கு ஆதரவாக கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் ஆகியவை மூடப்பட்டுள்ளன.