கார்த்தி சிதம்பரத்திடம் 120 கேள்விகளுடன் 4 சுற்று விசாரணை :சிபிஐ
மும்பை அழைத்து செல்லப்பட்ட கார்த்தி சிதம்பரத்திடம் இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி முன்னிலையில் விசாரணை மேற்கொள்ள சிபிஐ முடிவு.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்றுத்தர ரூ.10 லட்சம் முறைகேட்டிற்காக பரிமாற்றம் செய்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 28-ம் தேதி காலை சென்னை விமான நிலையத்தில் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
பின்னர் டெல்லி அழைத்து செல்லப்பட்ட கார்த்தி சிதம்பரம் பட்டியால நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஆணையிடுமாறு சிபிஐ கோரிக்கை வைத்தது. ஆனால் கார்த்தி சிதம்பரத்தை 1 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கார்த்தி சிதம்பரம் 1 நாள் காவல் விசாரணை முடிந்ததை அடுத்து, மறுநாள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள மேலும் 14 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க அவகாசம் வழங்க வேண்டும் என சிபிஐ கோரிக்கை வைத்துள்ளது. மேலும் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை எனவும் குற்றம்சாற்றியது சிபிஐ.
இந்நிலையில், கார்த்திக் சிதம்பரத்தை ஜாமீனில் விடுவிக்க கோரி மனு மீது தாக்கல் செய்யபப்ட்டது. அந்த மனு மீதான ஆணை மார்ச் 7-ல் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று கார்த்தி சிதம்பரத்தை மும்பை அழைத்து சென்றனர் சிபிஐ. ஷீனா போரா கொலை வழக்கில் தண்டனை பெற்று பைகுலா சிறையில் இருக்கும் இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி முன்னிலையில் கார்த்தி சிதம்பரத்திடம் தனித்தனியே 120 கேள்விகளுடன், நான்கு சுற்று விசாரணை மேற்கொள்ளப்படும் என சிபிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.