நடந்தே செல்லும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்.. அவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: ப. சிதம்பரம்
நகரங்களையும் விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்வதை பற்றி மத்திய மற்றும் மாநில அரசுகள் என்ன திட்டம் வைத்துள்ளன? முன்னாள் நிதியமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புது டெல்லி: கொரோனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுப்பதற்காக 21 நாள் லாக்-டவுன் (Lockdown)செய்யப்பட்ட காலத்தில் நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து நடந்து செல்வதை சுட்டிக்காட்டி, காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் (P Chidambaram) சனிக்கிழமை கேள்வி எழுப்பி உள்ளார்.
வேலை மற்றும் போதிய பணம் இல்லாமல் நகரங்களில் சிக்கித் தவிக்கும் இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்வது குறித்து பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை மேற்கோள் காட்டி சிதம்பரம் (P Chidambaram) ட்வீட் செய்துள்ளார்.
அவர், “ 21 நாட்கள் லாக் டவுன் காலத்தில் கிராமங்களுக்குத் திரும்பும் தொழிளார்கள் "நெரிசலான பேருந்துகளில் அல்லது நடந்தே செல்வது காணப்படுகிறது. இது அரசாங்கங்களின் ஆயத்தமற்ற மற்றொரு துன்பகரமான உதாரணம்” என்று சிதம்பரம் (P Chidambaram) ட்வீட் செய்துள்ளார்.
"நகரங்களையும் விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்வதை பற்றி மத்திய மற்றும் மாநில அரசுகள் என்ன திட்டம் வைத்துள்ளனர்?" என்று முன்னாள் நிதியமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிதம்பரத்திற்கு முன்பு, காங்கிரஸ் (Congress) தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) ஒரு ட்வீட்டில், நாடு தழுவிய லாக்டவுன் "நமது நாட்டின்' ஏழைகளையும், தொழிளார்களையும் பேரழிவிற்கு உட்படுத்தும்" என்றும், நெருக்கடியைச் சமாளிக்க இரக்கமுள்ள அணுகுமுறையை நாட வேண்டும் எனவும் கூறியிருந்தார.
பாரதீய ஜனதா தலைமையிலான (Bharatiya Janata Party) மத்திய அரசை, காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. சரியான திட்டமிடல் இல்லாமல் லாக்-டவுன் உத்த்ரவு விதித்ததாகவும், அதனால் தான் இடம்பெயர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் குற்றம் சாட்டியது.
"பாஜகவின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் பல்லாயிரக்கணக்கான மக்களை வீடற்றவர்களாகவும், பசியும் பட்டினியுமாக்கி உள்ளது என காங்கிரஸ் கூறியுள்ளது.
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்.சி.ஆர்) -NCR) பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உத்தரபிரதேச அரசு சனிக்கிழமை நூற்றுக்கணக்கான பேருந்துகளை அனுப்பியது.
உ.பி. மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (யுபிஎஸ்ஆர்டிசி) சார்பில் காஸியாபாத் மற்றும் கவுதம் புத் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்களை அழைத்து செல்ல பேருந்து அனுப்பப்பட்டது. ஆனால் பெருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பியதால், அதன் பின்னர் நிர்வாகம், பயணிகளின் வெப்ப பரிசோதனையைத் தொடங்கியது.
கொரோனா வைரஸை சமாளிக்க வேறு வழியில்லை, நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதன் நோய்த்தொற்றின் சுழற்சியை நாம் உடைக்க வேண்டும் என்று பிரதமர் கூறியிருந்தார் குறிப்பிடத்தக்கது.