‘பாரம்பரிய பழக்கம்னா, ‘ஏ.சி’ ஏன் பயன்படுத்துறீங்க ?’ - மடாதிபதிகளுக்கு பழ.நெடுமாறன் கேள்வி
மடாதிபதிகள் நவீன சாதனங்களை பயன்படுத்துவது ஏன்? - பழ.நெடுமாறன் சரமாரிக் கேள்வி
மடாதிபதிகள் பல்லக்கில் செல்லலாமா ? வேண்டாமா ? என்பதுதான் தற்போதைய விவாதமாக உள்ளது. முதலில் பிரச்சனை எங்கிருந்து தொடங்கியது ?.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடம் பழமையான சைவ ஆதீனமாகும். அதில் ஆதீன கர்த்தராக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி காலமானார். அதனை தொடர்ந்து ஆதீனத்தின் 27 வது ஆதீன கர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அதே ஆண்டு டிசம்பர் 13 ம் தேதி ஞான பீடத்தில் அமர்ந்தார். பதவியேற்ற நாளில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிப் பல்லக்கில் புதிய ஆதீனகர்த்தர் அமரந்து வீதி உலா வந்தார். அந்த பல்லக்கை, ஆதீனத்தில் உள்ள அடிதட்டு மக்கள் சுமந்து வந்தனர்.
மேலும் படிக்க | இப்படி செஞ்சா கள்ளழகர் சிலைக்கே பாதிப்பு : எச்சரிக்கும் பட்டர்
இதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்தார். மனிதனை மனிதன் தூக்கிச் சுமக்கும் இதுபோன்ற பட்டினப்பிரவேசவத்தை தடை வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அந்த அறிக்கையில், ‘தந்தை பெரியார் கூறிய கருத்தினை ஏற்று சங்கராச்சாரியாரும் கூட, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் செல்வதைத் தவிர்த்தார் என்பது வரலாறு’ என்று கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை வெளியான பிறகு, பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் குரு மகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்துத் தூக்கிச் செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
இதன்பின்னர், இந்த விவகாரம் கடும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஆதீனத்தின் பல்லக்கிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மடாதிபதிகள் நவீன சாதனங்களை பயன்படுத்துவது ஏன்? என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க | பழமையான கோவில்களின் புணரமைப்பில் ‘அலட்சியம்’ வேண்டாமே!
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்திற்கு உலகம் முழுவதிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்ட இந்த காலகட்டத்தில், இது எங்களது பாரம்பரியமான பழக்கம், அதை ஒருபோதும் கைவிட முடியாது என மடாதிபதி ஒருவர் அறிக்கை வெளியிட்டிருப்பது காலத்திற்கு ஒவ்வாததாகும். பல்லக்கில் பவனி வருவது பாரம்பரிய பழக்கமாகும். அதை ஒருபோதும் கைவிட மாட்டோம் எனக் கூறும் மடாதிபதிகள் தங்களின் மடத்து அறையில் குளிர்சாதனம் பொருத்தியிருப்பது ஏன்? குளிர்சாதனம் பொருத்தப்பட்ட விலையுயர்ந்த கார்களில் பவனி வருவது ஏன்? தொலைப்பேசி, கைப்பேசி மற்றும் கணினி, வானொலி, தொலைக்காட்சி போன்ற மிக நவீன சாதனங்களை மடங்களில் வைத்திருப்பது ஏன்? பக்தர்களுக்கு அருளுரை ஆற்றும்போது ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது ஏன்? இவற்றையெல்லாம் பயன்படுத்தும் போது மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன்? மடாதிபதிகள் உள்பட யாராக இருந்தாலும் தாங்கள் வாழும் காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை கைவிட்டு உலகத்தோடு ஒட்டிச் செல்லவேண்டும். இல்லையேல் மக்களால் புறக்கணித்து ஒதுக்கப்படுவார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | திருவிழாவில் நீதிமன்றம்: ஆங்கிலேயர் காலத்திலிருந்து தொடரும் ஐதீகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR