தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 2-ம் ஆண்டு நினைவு நாள்: தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி
![தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 2-ம் ஆண்டு நினைவு நாள்: தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 2-ம் ஆண்டு நினைவு நாள்: தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2020/06/25/162808-thoothukudi-1.jpg?itok=zM-hUf5p)
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 15 பேரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் (Thoothukudi Firing) உயிரிழந்த 15 பேரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று, அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இறந்தவர்களின் உறவினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 அன்று தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் (Sterlite Protests) ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது. அந்த வன்முறையில் பொதுச்சொத்துக்களுக்குத் தீவைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற வெறியாட்டங்கள் அரங்கேற்றியது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.
மேலும் படிக்க: வரும் கல்வியாண்டு முதல் கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு துவங்கப்படும்...
அதில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருப்பதால், பொது அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் கூடாமல், இறந்தவர்களின் கல்லறையில் அவர்களின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற பகுதிகளில் போராட்டத்தில் பலியானவர்களின் புகைப்படங்களை அலங்கரித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி (Thoothukudi) துப்பாக்கிச் சூடு நினைவு தினத்தை முன்னிட்டு, போராட்டம் நடைபெற்ற பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சுமார் 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
என்ன நடந்தது?
தூத்துக்குடி (Thoothukudi) ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 மே 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 15 உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இதை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் போராட்டம் நடத்தினர். இறந்தவர்களுக்கு நீதி வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் தமிழக அரசு நிதியுதவி அளித்தது.