ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களாக சரவணபிரபு மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக மருத்துவர் சரவணபிரபுவை சின்னத்தம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து சுகாதார துறை துணை இயக்குனர் உத்தரவிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவர் சரவணபிரபுவின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை தொடர்ந்து எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பணிபுரிய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியும் எண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 150க்கும் மேற்பட்டோர் எண்ணமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இரண்டு அரசு பேருந்துகளைப் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


சாலை மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் மண்டல துணை வட்டாட்சியர் ஜெகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் சக்திகிருஷ்ணன், மற்றும் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


தொடர்ந்து பேச்சுவார்த்தையின் முடிவில் பொதுமக்களின் கோரிக்கையை மனுவாக வழங்கும் படியும் அதனை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வட்டார மருத்துவ அலுவலர் சத்திகிருஷ்ணன் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இரண்டு மணி நேரம் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்ட போதிலும் அப்பகுதியில் பெரிய அளவு போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.