ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனின் 2 மாத பரோல் நிறைவடைந்த நிலையில் ஜோலார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.  பின்னர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். 


இதனிடையே அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை அருகே இருந்து கவனித்து கொள்ளவும், பேரறிவாளனின் சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவும் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் அளிக்கப்பட்டது.


இதனைத்தொடர்ந்து, அவர் கடந்த நவம்பர் மாதம் 12-ஆம் தேதி ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார். சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு வந்த பேரறிவாளன் அங்கிருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.


பின்னர், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட ஒரு மாதம் பரோல் முடிவடையும் தருவாயில் அவரது தந்தையின் உடல் நலம் காரணம் காட்டி அவரது பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. அவரது தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கையின் பேரில் அவரது பரோல் நீட்டிக்கப்பட்டது. 


இந்நிலையில் பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட 2 மாத பரோல் இன்றோடு முடிவடையும் நிலையில், ஜோலார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து சிறைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.


முன்னதாக, பேரறிவாளன் உள்ளிட்ட, ராஜிவ்காந்தி கொலை குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரை விடுவித்தால் சர்வதேச அளவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


--- வழக்கின் பின்னணி---


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டுமென சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 


ஆனால், இதுநாள் வரையிலும் ஆளுநர் தரப்பில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், நளினி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் அவர் தன்னை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு 2018 டிசம்பரிலேயே தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவிட்டது, ஆனால், ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் தான் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டு இருப்பதாகவும் மனுவில் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். ஆகவே, தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார். 


இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி 7-ஆம் தேதி நடைப்பெற்றது. விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் அதன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில்., நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க 2016-ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதி அனுமதி கேட்டது. அதற்கு பதிலளித்து 2018 ஏப்ரல் 18-ஆம் தேதி மத்திய அரசு அனுப்பிய பதிலில், அந்தக் கோரிக்கையை நிராகரித்திருந்தது என தெரிவித்தார்.


மேலும் இந்த வழக்கில் நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்...