இந்த கதையை ஒரு தாயோட கதையாகத்தான் சொல்ல வேண்டும் என்ற வசனம் கேஜிஎஃப் 2வில் இடம்பெற்றிருக்கும். அதுபோல்தான் பேரறிவாளனின் கதையும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேரறிவாளன். ஒட்டுமொத்த தமிழ்நாடும் நினைவில் வைத்திருக்கும் பெயர். அந்தப் பெயரை தாண்டி இன்னொரு பெயர் அனைத்து தமிழர்களின் நெஞ்சத்திலும் இருக்கும். அந்தப் பெயர் அற்புதம் அம்மாள். சாதாரண விசாரணைக்குத்தான் என்று 31 வருடங்களுக்கு முன்பு அழைத்து செல்லப்பட்ட மகன் மீண்டும் திரும்ப மாட்டான் என்று தெரியாமலேயே அனுப்பிவைத்தவர் அற்புதம் அம்மாள்.



அதிகார அமைப்புக்கு எதிராக போராடுவது என்பது மிகப்பெரிய விஷயம். அதை அற்புதம் அம்மாள் 30 வருடங்களாக தொடர்ந்து செய்துகொண்டே இருந்தார். கைது என்ற பெயரில் பேரறிவாளன் அழைத்து செல்லப்பட்ட நாளில் இருந்து விடுதலை என்று இன்று தீர்ப்பு வரும்வரையில் அற்புதம்மாளின் உழைப்பு சொல்லுக்குள் அடங்காதது.


கைது செய்யப்பட்டு பூவிருந்தவல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை பார்ப்பதற்கு பல நேரங்களில் அற்புதம்மாளுக்கு அனுமதிகூட கிடைத்ததில்லை. இருந்தாலும், குற்றம் செய்யாத தனது மகனை இந்த சதி வலையிலிருந்து மீட்பேன் என்ற உறுதி மட்டும் அவருக்கு குறைந்ததே இல்லை.



எங்கேனும் சிறு ஒளிக்கீற்று தெரிந்திராதா என அலைந்து திரிந்தவர் 4 முதலமைச்சர்களை சந்தித்திருக்கிறார். மகனின் விடுதலைக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.


ஆனால் அரசியல், அதிகாரத்திற்கு முன் அந்தத் தாயின் போராட்டம் சோர்ந்துபோய்விடும் என பலர் நினைத்தனர். ஆனால் அவர் போட்டிருந்த ரப்பர் செருப்புகள் தேய நடந்தார். தன் மகன் குற்றவாளி அல்ல என தொண்டை தண்ணீர் காய பேசினார்.



அதிகார அரசியலுக்கு எதிராக ஒரு ஆண் போராடி கத்தினாலே காதில் வாங்காத இந்த பொது சமூகம் அற்புதம்மாளையும் அப்படியே நடத்தியது. எதைப்பற்றியும் கவலைப்படவில்லை அற்புதம்மாள்.



அவரது உறுதித்தன்மை சிபிஐ விசாரணை அதிகாரி தியாகராஜனின் மௌனத்தை கலைத்தது. தான் கடமையிலிருந்து வழுவி விட்டதாக அவர் கூறிய வார்த்தை அத்தனை ஆண்டு கால அற்புதம்மாளின் போராட்டத்திற்கு முதல் அங்கீகாரத்தை பெற்று தந்தது.


பேரறிவாளனின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைந்தது, அவருக்கு பரோல் கிடைத்தது என பேரறிவாளன் சுதந்திர காற்றை சுவாசிக்க அற்புதம்மாள் ஓய்வின்றி காற்றாக பறந்தார். ஒருகட்டத்தில் தந்தையை இழந்த ராகுல் காந்தியேகூட, “நாங்கள் எங்கள் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டோம்” என கூறினார்.


மேலும் படிக்க | ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் விடுதலை, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


அப்படி அவர் சொல்லியதற்கு ஏகப்பட்ட காரணங்களை பலர் கூறலாம். ஆனால், ராகுல் அப்படி பேசியதற்கு அற்புதம்மாளுக்கு அதிக பங்கு இருக்கிறது.



செய்யாத குற்றத்துக்கு, வாழ்வின் பாதியை சிறையில் கழிக்கும் மகனை கண்டு எந்த தாய்க்குத்தான் வேதனை இருக்காது. ஒருபக்கம் குடும்பம், மறுபக்கம் மகனை சிறையிலிருந்து எடுக்க தொடர் போராட்டம், மறுபக்கம் தீவிரவாதியை பெற்றவள் என்ற பெயர், இன்னொரு பக்கம் அற்புதம்மாள் செய்வது தேவையற்ற வேலை என்ற பேச்சு என எந்தப் பக்கம் திரும்பினாலும் அற்புதம்மாள் சந்தித்தது வேதனைகளையும், உதாசீனங்களையும், அவப்பெயரையும் மட்டும்தான். 


ஆனால் அற்புதம்மாள் அந்த வேதனைக்குள் அடங்கவில்லை. உண்மை ஒருவர் பக்கம் இருந்தால் நிச்சயம் அவரது போராட்டத்துக்கு வெற்றி கிடைக்கும் என்பதற்கு அவர் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. 



ஒரு பெண் நினைத்தால் அதுவும் ஒரு தாய் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்துமுடிக்கலாம் என்பதை வரலாறுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு பேரறிவாளனின் விடுதலையை ஆனந்த கண்ணீரோடு வரவேற்றிருக்கிறார். அந்த கண்ணீர் இதுவரை அவர் பட்ட வேதனைகளை கழுவியிருக்கும்.



ஒட்டுமொத்த சமூகத்தாலும் தீவிரவாதி, ஒரு நாட்டின் பிரதமரை கொன்றவர் என முத்திரை குத்தப்பட்ட ஒருவரை தனி மனுஷியாக மீட்டு எடுத்திருக்கும் அற்புதம்மாள் கண்டிப்பாக அதிசயம்தான்.


மேலும் படிக்க | முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் விடுதலை... பேரறிவாளனின் ரியாக்‌ஷன் என்ன?


உறங்காத இரவுகள், ரசிக்காத காட்சிகள் என அற்புதம்மாளின் கண்கள் பட்ட வேதனை அதிகம். ஓய்வே எடுக்காமல் பல பகல்களில் அவரது கால்கள் நடந்த தூரங்கள் அதிகம். மனதில் அவருக்கு இருந்த பாரங்கள் அதிகம். இன்றைய விடுதலை அவரின் கண்களை உறங்க செய்யும், கால்களை இளைப்பாற செய்யும், மனதில் இருந்த பாரத்தை தீர்த்து வைக்கும். வாழ்த்துகள் அற்புதம்மாள்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!