இராம் அவதேஷ் சிங்கின் மறைவு சமூகநீதிக்கு ஏற்பட்ட பேரிழப்பு: Dr. S. Ramadoss இரங்கல்.!!
இராம் அவதேஷ் சிங்கின் மறைவு சமூகநீதிக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில்.,
லோக்தளம் கட்சியின் தலைவரும், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக தமது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவருமான இராம் அவதேஷ் சிங் பட்னாவில் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பீகாரில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த இராம் அவதேஷ் சிங், சோசலிசத் தலைவர் இராம் மனோகர் லோகியாவின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு அவரது சம்யுக்தா சோசலிசக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். பின்னர் ஜனதாக் கட்சி சார்பிலும், லோக்தளம் கட்சி சார்பிலும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தந்தை பெரியார் மீது கொண்ட பற்று காரணமாக வட இந்தியாவில் அவரது கொள்கைகளைப் பரப்பியவர். அதனால் வட இந்தியப் பெரியார் என்றிழைக்கப்பட்டவர்.
பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அவர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. பெரியவர் ஆனைமுகத்து அவர்களை வட இந்தியாவில் அறிமுகப்படுத்தியவரான இராம் அவதேஷ் சிங், அவருடன் இணைந்து அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் மதச் சிறுபான்மையினர் பேரவை என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் சமூகநீதிக்கான போராட்டங்களை நடத்தியவர்.
ALSO READ | கல்லூரி தேர்வு ரத்து: மாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டக் கூடாது - PMK
பீகார் , உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் அவர் நடத்திய தொடர் போராட்டங்கள் தான் மண்டல ஆணையம் அமைக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. மண்டல ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதை நிறைவேற்றச் செய்வதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தினார். 1989, 1990 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் உரையாற்றிக் கொண்டிருந்த போது, மண்டல ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்க வலியுறுத்தி தன்னந்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதனால் குடியரசுத் தலைவர் அவரது உரையைச் சிறிது நேரம் நிறுத்த வேண்டிய நிலை உருவானது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் இராம் அவதேஷ் சிங் நடத்திய இந்தப் போராட்டம் தான் மண்டல ஆணையம், பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு ஆகியவை குறித்த புரிதலை அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு ஏற்படுத்தியது. அது தான் பின்னாளில் மண்டல ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப் படும் என்று வி.பி.சிங் அறிவிக்கக் காரணமாக அமைந்தது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட வி.பி.சிங், அதுகுறித்த தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக தம்மை விட வயதில் இளையவரான இராம் அவதேஷ் சிங்கின் வீடு தேடிச் சென்றார் என்பதிலிருந்தே வி.பி.சிங் மனதில் அவர் எந்த அளவுக்குப் பிற பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
27% இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதிவரை வாதாடியவர். எனது இனிய நண்பர். தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் எனது தைலாபுரம் தோட்ட இல்லத்திற்கு வந்து தங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். நானும் பீகாரில் உள்ள அவரது இல்லத்திற்குப் பலமுறை விருந்தினராகச் சென்று தங்கியுள்ளேன். மத்திய அரசு வேலைவாய்ப்பில் பிற்படுத்தப் பட்டோருக்கு வழங்கப்பட்ட 27% இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி 1991-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி தில்லியில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் வீட்டு முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் இராம் அவதேஷ் சிங் பங்கேற்றார்.
ALSO READ | பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் கூடாது: மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம்!
சமூகநீதி, பிற்படுத்தப்பட்டோர் நலனை வலியுறுத்தி தில்லியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப் பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் இராம் அவதேஷ் கலந்து கொண்டிருக்கிறார். மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆதரவு திரட்டுவதற்காகக் கர்நாடகம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள தலைவர்களைச் சந்தித்துப் பேசிய போது, இராம் அவதேஷ் சிங் அவர்களும் என்னுடன் வந்தார்.
சென்னையில் 1992-ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாடு உட்படப் பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். பா.ம.க.வின் சமூகநீதிக் கொள்கையை வியந்து பாராட்டியவர். அவரது மறைவால் ஒரு நல்ல சமூகநீதித் தோழனை இழந்து வாடுகிறேன். அவரது மறைவு சமூகநீதிக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.